உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குளிர்பானங்களில் 20 சதவீதம் மாம்பழக்கூழ் பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

குளிர்பானங்களில் 20 சதவீதம் மாம்பழக்கூழ் பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

சென்னை:'குளிர் பானங்கள் உற்பத்தி தொழிலில் குறைந்தபட்சம், 18 முதல் 20 சதவீதம் வரை, மாம்பழக்கூழ் உள்ளடக்கத்தை உறுதி செய்ய அறிவுறுத்த வேண்டும்' என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிக குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும், தமிழக விவசாயிகள் நடப்பாண்டு கடுமையாக பாதிக்கப்பட்டனர். வரும் பருவத்திலும், மாங்காய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க, தமிழக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் விற்கப்படும் மாம்பழ பானம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் உற்பத்தி செய்யப்படுகிறது. பானங்களில் மாம்பழக்கூழ் சேர்க்கப்படுவதில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்தின் தரநிலைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு எழுதிய என் கடிதத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. மாம்பழ விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலன் கருதி, மாம்பழங்களை அடிப்படையாக கொண்ட பானம் உற்பத்தி தொழிலில், குறைந்தபட்சம், 18 முதல் 20 சதவீதம் வரை பழக்கூழ் உள்ளடக்கத்தை உறுதி செய்ய அறிவுறுத்த வேண்டும். இதனால், பானத்தின் தரமும் மேம்படும். மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்தவும், மா பொருட்களை வகைப்படுத்தவும், தமிழக மாம்பழ ஏற்றுமதி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஏற்றுமதி தரநிலைகளுக்கு ஏற்ப செயல்முறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்த, இந்திய அரசின் வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் முன்வர வேண்டு ம். ஒருங்கிணைந்த, 'பேக்கிங்' செய்யும் வசதிகள், கொள்கலன் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட துறைமுகங்கள், தர சோதனை ஆய்வகங்கள், வாங்குபவர் - விற்பனையாளர்கள் சந்திப்புகளை ஏற்பாடு செய்தல், வெளிநாட்டில் வாங்குபவர்களை அடையாளம் காணுதல் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும். இந்த பிரச்னையில் பிரதமர் மோடி தலையிட்டு, மாம்பழ விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டும். மேம்பட்ட ஏற்றுமதி மற்றும் மதிப்பு கூட்டல் வாயிலாக, நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்வதற்கு உதவ வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். மாம்பழ கொள்முதல் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி , ஏற்கனவே பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அப்போது, மத்திய அரசு தரப்பில், இப்பிரச்னையை, மாநில அரசுகளே பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட் டது. தற்போது, மாம்பழ பிரச்னை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை