உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயணியர் போக்குவரத்தில் கோவை ஏர்போர்ட் புது உச்சம்

பயணியர் போக்குவரத்தில் கோவை ஏர்போர்ட் புது உச்சம்

சென்னை:விமானப் பயணியர் போக்குவரத்தில், கோவை விமான நிலையம் புது உச்சத்தை எட்டியுள்ளது.தமிழகத்தில், சென்னை, திருச்சிக்கு அடுத்தபடியாக, கோவை விமான நிலையம் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. கோவையில் இருந்து, அபுதாபி,ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், டில்லி, கொல்கட்டா, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட, நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், தினசரி விமான சேவைகள் உள்ளன. விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம், மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, வேலை, மருத்துவம், கல்வி போன்ற காரணங்களுக்காக, மற்ற இடங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை, கணிசமாக உயரத் துவங்கி உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான பயணியர் வருகை விபரங்களை, இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுஉள்ளது.அதில் புது உச்சமாக, கோவை விமான நிலையம், கடந்த ஏப்., மாதம் மட்டும், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பயணியரை கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்., மாதத்தில், சர்வதேச பயணியர் எண்ணிக்கை 17,452; நடப்பாண்டு 25,537 ஆக அதிகரித்துஉள்ளது. இதே போல் உள்நாட்டு பயணியர் போக்குவரத்து, கடந்த ஆண்டு ஏப்., மாதத்தில் 2.29 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு 2.83 லட்சமாக அதிகரித்துஉள்ளது. ஒட்டுமொத்தமாக இது 24.9 சதவீதம் வளர்ச்சி.பயணியர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோவை விமான நிலையத்தில், விமான சேவைகள் எண்ணிக்கையை அதிகரிப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற பணிகளை, ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பயணியர் மத்தியில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ