தற்கொலை மிரட்டல் விடுத்த கோவை முதியவர் மீட்பு
கடலுார் : கடலுாரில் தற்கொலை மிரட்டல் விடுத்த கோவை முதியவரை போலீசார் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை,74; கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்ட அழகுதுரை, கடலுார் கடற்கரையில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு, போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கோவை மாவட்ட போலீசார் நடத்திய விசாரணையில், அழகுதுரை, கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட போலீசாரின் வேண்டுகோளின்பேரில், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, லாட்ஜில் தங்கியிருந்த அழகுதுரையை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அதில், குடும்ப தகராறில் வீட்டை விட்டு வெளியேறியது தெரிய வந்தது. அவரை போலீசார் சமாதானம் செய்து, குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.