உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட உறுதி; வீரேந்திர குமார்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட உறுதி; வீரேந்திர குமார்

மதுரை:''மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது,'' என, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் மதுரையில் நடந்த விழாவில் பேசினார்.மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் திறன் வளர்ச்சி, மறுவாழ்வு, மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த மண்டல மையம், மதுரை, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ளது. இங்கு மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் ஆய்வு செய்தார். இம்மையத்திற்கு ஒத்தக்கடை அருகே ஒய்.புதுப்பட்டியில் 5.05 ஏக்கரில், 36.41 கோடியில் புது கட்டடம் அமைய உள்ளது. இதற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.அமைச்சர் பேசியதாவது:மாற்றுத்திறனாளிகளுக்கான ஊனத்தின் தன்மையில் 21 வகைகள் உள்ளன. இத்துறையின் கீழ் நாடு முழுதும், 25 மண்டல மையங்கள் செயல்படுகின்றன. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மறுவாழ்வு, கல்வி, திறன் மேம்பாடு, சமூக ஒருமைப்பாடு போன்ற ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கி வருகிறது.சென்னையிலுள்ள பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்தில் ஜீரோ வயது முதல் 6 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆரம்ப கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் அவர்களை முன்னேற்ற முடியும் என ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. இதற்குரிய கட்டமைப்புடன் கூடிய மையங்களை மாவட்டந்தோறும் கொண்டு வருவதே பிரதமர் மோடியின் நோக்கம்.மதுரை மண்டல மையம் மூலம், சிறப்பு சேவைகள் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதனால் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே உதவிகளை பெற முடியும்.மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட, அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. உயர்தர சேவையை கிடைக்க செய்வதற்கான முயற்சி இது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை