மின்சார சேவை தாமதத்துக்கு இழப்பீடு அது பெரிய புராசஸ் என்கிறது வாரியம்
சென்னை:புதிய மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட மின்சார சேவைகளை, ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள கால அவகாசத்திற்குள் செய்து தரவில்லை எனில், இழப்பீடு வழங்கும் சேவையை துவக்க, மின் வாரியம் அலட்சியம் காட்டுகிறது. 'இதற்கான மென்பொருளை உருவாக்கும் பணி பெரிய புராசஸ்' என, மின் வாரியம் காரணம் கூறுகிறது. புதிய மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளை, மின் வாரியம் குறித்த காலத்திற்குள் செய்து தருவதில்லை. இதனால், பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, புதிய மின் இணைப்பு, மின் கட்டண விகிதம் மாற்றம், மின் தடை புகார், கூடுதல் மின் பளு, குறைபாடு உடைய மீட்டர் மாற்றம் உள்ளிட்ட ஒவ்வொரு சேவையையும், குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து தரும் வகையில் காலக்கெடுவை, ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதற்கு பின்னரும் செய்து தரவில்லை எனில், பாதிக்கப்பட்ட நபருக்கு, மின் வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும். அதன்படி, அவகாசத்தை தாண்டி தாமதம் செய்யப்படும் ஒவ்வொரு நாளும், 200 ரூபாய் என, அதிகபட்சம், 2,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது; இதை பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்குவதில்லை; இந்த விபரமும் பலருக்கு தெரிவதில்லை. எனவே, தாமத சேவைகளால் பாதிக்கப்படும் நபர் கேட்காமலே, அதற்கான இழப்பீட்டை, அவரது மின் இணைப்பு கணக்கில் வழங்குமாறு, 2024 ஏப்ரலில், மின் வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. அதற்கான மென்பொருளை உருவாக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த பணிகளை முடிக்க, அந்தாண்டு ஆக., வரை அவகாசம் அளிக்கப்பட்டது; அதற்குள் பணிகளை முடிக்கவில்லை. பின், இந்தாண்டு பிப்., வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் பணிகளை முடிக்காததால், மார்ச் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிவடைந்து, ஆறு மாதங்களாகியும், தானாகவே இழப்பீடு வழங்கும் சேவையை துவக்காமல், மின் வாரியம் அலட்சியமாக உள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் சேவையால் பாதிக்கப்படுவோருக்கு, தானாகவே இழப்பீடு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தால், பணிகளில் அலட்சியம் காட்ட முடியாது. இதனால், மின் வாரியத்தின் சேவை மேம்படும். இதை செயல்படுத்தாமல் தாமதம் செய்வதற்கு என்ன காரணம் என கேட்டால், 'இந்த சேவைக்காக மூன்று மென்பொருளை உருவாக்கி, நுகர்வோரின் மின் இணைப்பு எண்களுடன் இணைக்கப்பட வேண்டும். இது, மிகப்பெரிய புராசஸ்' என, வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த பணியை தொடர்ந்து கண்காணித்து, விரைவாக செயல்படுத்துவதை, ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.