உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிருஷ்ணகிரி மாவட்ட கல் குவாரிகளில் ரூ.25 ஆயிரம் கோடி முறைகேடு வசூலித்து நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு காங்., கடிதம்

கிருஷ்ணகிரி மாவட்ட கல் குவாரிகளில் ரூ.25 ஆயிரம் கோடி முறைகேடு வசூலித்து நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு காங்., கடிதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு அனுமதி பெறாமல் இயங்கும், 174 கல் குவாரிகளில், 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ள முறைகேடுகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான டாக்டர் செல்லகுமார் கடிதம் எழுதியுள்ளார்.கடித விபரம்:கடந்த 2020ம் ஆண்டு, ஆக., 4, கொரோனா காலக்கட்டத்தில், கிருஷ்ணகிரி கலெக்டர், 18 கிரானைட் குவாரிகளுக்கு, டெண்டர் கோரினார். அதை எதிர்த்து, தொகுதி எம்.பி., என்ற முறையில் வழக்கு தொடர்ந்தேன். அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டதாக, கலெக்டர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.அன்றைய இரவே கலெக்டர் மாறுதல் செய்யப்பட்டு, புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டார். அவர் மீண்டும் அதே 18 குவாரிகளுக்கு டெண்டர் கோரினார். மீண்டும் நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. நானே நீதிமன்றத்தில் வாதாட அனுமதி பெற்றுள்ளேன். அரசு தலைமை வழக்கறிஞர், நான் எடுத்த முயற்சிக்கு ஆதரவாக இருப்பார் என, நம்புகிறேன்.சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், இங்குள்ள 2 கல் குவாரிகளில் மட்டும், 198 கோடி ரூபாய் அளவுக்கு, முறைகேடாக கனிம வளம் திருடப்பட்டு உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், அனைத்து குவாரிகளையும, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டத்தில், நான் பலமுறை வலியுறுத்தியதன் அடிப்படையில், 10, 15 குவாரிகளை ஆய்வு செய்து, 300 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர். ஆனால், அபராதத் தொகையை முறையாக வசூலிக்கவில்லை. தவணை முறையில் செலுத்த அரசு அனுமதி அளித்தது.இதெல்லாம் தங்களது ஆட்சியில் நடந்ததை எண்ணி வேதனை அடைந்தேன். இந்த 300 கோடி ரூபாய் அபராதம் என்பதே, 'ரெக்கவரி ரேட்'டில் பார்த்தால், வெறும் 20 - 30 சதவீதம் தான். 90 சதவீதம் என்றால், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வந்திருக்கும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 300க்கும் மேற்பட்ட குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த குவாரிகளில், 'ட்ரோன்' வாயிலாக சர்வே செய்தால், நிச்சயம் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான, மக்களின் சொத்துக்கள், ஒரு சில தனி நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வரும்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்படி, இம்மாவட்டத்தில் அனுமதி இல்லாமல், 174 குவாரிகள் இயங்குவதாக தெரிய வந்துள்ளது. 174 குவாரிகளில் முழுமையாக ஆய்வு செய்தால், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகளை கண்டுபிடிக்க முடியும்.அதற்கு அபராதம் விதித்து, முழுமையாக வசூலித்தாலே, அரசின் கடன் சுமையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை குறைத்து விடமுடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
நவ 20, 2024 07:37

எல்லா குவாரிகளிலும் கப்பம் கட்டி கொள்ளை அடிப்பதால் ஒரு சிலர் செல்வத்தில் கொழிக்கின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை