மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுஷ்டிப்பு முடிவதற்குள், அரசு விழாக்களில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றதால், டில்லி காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 26ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவை ஒட்டி, 7 தினங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மத்திய அரசு சார்பில், 7 நாட்கள், நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்பட்டது. மத்திய அரசும், காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளும், ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தி.மு.க., அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து, காங்., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
நாடு தழுவிய 7 நாள் துக்கத்தை, மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னை நந்தனத்தில், 48வது புத்தக கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி, கடந்த 27ம் தேதி துவக்கி வைத்தார். துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜ் கல்லுாரியில், அரசு சார்பில் நடந்த புதுமைப் பெண் திட்டம் விரிவாக்க விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.அந்த விழாவை தொடர்ந்து, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை ஒட்டி, கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில், முதல்வர் ஸ்டாலினும், தி.மு.க., அமைச்சர்களும் பங்கேற்றனர்.டில்லி தலைமை உத்தரவால், தென் மாவட்ட காங்கிரஸ் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், இவ்விழாக்களில் பங்கேற்கவில்லை.இந்நிலையில், தி.மு.க., தலைமைக்கு, காங்கிரஸ் மேலிடம் அனுப்பியுள்ள கடிதத்தில், 'மன்மோகன் சிங் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்காமல், அரசு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்க வேண்டாம்' என கூறப்பட்டுள்ளது.அக்கடிதத்திற்கு பதில் அளிக்கும் வகையில், 'ஏற்கனவே அரசு சார்பில் அறிவித்து, ஏற்பாடு செய்யப்பட்ட விழாக்கள் மட்டும் நடத்தப்பட்டுள்ளன. வேறு புதிய விழாக்களோ, நிகழ்ச்சிகளோ நடத்தவில்லை. திட்டமிட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்து மீண்டும் நடத்தினால், அரசுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். நிதி நெருக்கடி காரணமாக, மக்கள் நலப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டு உள்ளன' என, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -