234 நகரங்களில் எப்.எம்., ரேடியோ செய்தி ஒலிபரப்பு குறித்து பரிசீலனை * அமைச்சர் எல்.முருகன் தகவல்
சென்னை:தொலைதுார பகுதி மக்களுக்காக, 234 நகரங்களில், எப்.எம்., ரேடியோ நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கான அலைக்கற்றை ஏலம், வரும் ஜனவரியில் நடக்கும் என்றும், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நேற்று நடந்த எப்.எம்., ரேடியோ தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அவர் அளித்த பேட்டி:மூன்றாவது முறையாக மோடி பிரதமரானதும், 100 நாட்களில் 15 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை அறிவித்துள்ளார். இதில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக, 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு கோடி குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்பட உள்ளன.தமிழகத்தில் 11 நகரங்கள் உட்பட, 234 நகரங்களில் எப்.எம்., ரேடியோ நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு வசதி கிடைக்காத தொலைதுார பகுதிகளில், இந்த ரேடியோ நிலையங்கள் அமைய உள்ளன. ஒவ்வொரு நகரத்திற்கும் மூன்று ரேடியோ நிலையங்களுக்கு உரிமம் வழங்கப்படும். இதற்கான அலைக்கற்றை ஏலம், வரும் ஜனவரியில் நடக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை மிகப்பெரிய பங்களித்து வருகிறது. அதன் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை, உதவிகளை, மோடி அரசு செய்து வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் இருந்து வெளியாகும் நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகளின் ஒரு பிரதியை, டில்லிக்கும், லண்டனுக்கும் அனுப்ப வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இது நடைமுறையில் இல்லாவிட்டாலும் சட்டம் இருந்தது. 75 ஆண்டுகளுக்கு பின், மோடி ஆட்சியில்தான் இந்தச் சட்டம் நீக்கப்பட்டது. அதேபோல காலத்திற்கு பொருந்தாத, 1,500 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சி, யு -டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வன்முறை, ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், தவறான தகவல்களை பரப்பினால், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும். எப்.எம்., ரேடியோவில் செய்திகளை ஒலிபரப்ப அனுமதிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
'வாழ்த்து சொல்வதால் மாற்றம் நிகழாது!'
அமைச்சர் முருகன் கூறியதாவது:ஹரியானாவைப் போல மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். வயநாடு லோக்சபா இடைத்தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., தீவிரமாக முயற்சிக்கும்.நடிகர் விஜய் கட்சி மாநாட்டுக்கு, மற்ற கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து சொல்வதால், எந்த மாற்றமும் ஏற்படாது. வாழ்த்து சொல்வது என்பது இயல்பானது. தி.மு.க., அரசு மீது, தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதனால், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோற்பது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.