உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கட்டண பிரச்னையை தவிர்க்க நுகர்வோரே ‘ரீடிங்’ எடுக்கும் வசதி

மின் கட்டண பிரச்னையை தவிர்க்க நுகர்வோரே ‘ரீடிங்’ எடுக்கும் வசதி

சென்னை: வீடுகளில் அதிக மின் கட்டணம் வருவதாக எழும் பிரச்னைக்கு தீர்வு காண, நுகர்வோரே சுயமாக மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் வசதியை மின் வாரியம் ஏற்படுத்த உள்ளது. தமிழகத்தில் வீடு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் இணைப் புகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, வீடுகளுக்கு சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை, பணியாளர்கள் கணக்கு எடுக்கின்றனர். பணியாளர்கள் பற்றாக்குறையால், சில இடங்களில் கணக்கு எடுக்க தாமதம் ஏற்படுகிறது. சிலர் நேரில் செல்லாமல் தாங்களே உத்தேசமாக கணக்கு எடுக்கின்றனர். இதனால், குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளிலும், அரசின் இலவச சலுகை கிடைக்காமல், அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. எனவே, மின் பயன்பாட்டை நுகர்வோரே சுயமாக கணக்கெடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக, ஏற்கனவே உள்ள மின் வாரியத்தின் மொபைல் போன் செயலியில், அந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால், மின் பயன்பாடு கணக்கெடுக்க வேண்டிய, அதாவது, 60 நாட்கள் மற்றும் சலுகை காலமாக மூன்று நாட்கள் என, 63வது நாளில் நுகர்வோர் தங்கள் மொபைல் போனில் உள்ள மின் வாரிய செயலியில் மீட்டரை புகைப்படம் எடுக்க வேண்டும். அதில் யூனிட் அளவு பதிவானதும், புகைப்படம் எடுக்கும் பணி முடிவடையும். பின், அதை, அதிலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும். கணக்கு எடுக்கப்பட்ட மின் பயன்பாட்டு அளவு, முந்தைய மாத மின் பயன்பாட்டு அளவுடன் மென்பொருள் வாயிலாக ஒப்பீடு செய்யப்பட்டு, நடப்பு மாத அளவு இறுதி செய்யப்படும். பின், அதற்கான மின் கட்டணம் நுகர்வோருக்கு தெரிவிக்கப்படும். சுயமாக கணக்கெடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது. இதனால், அதிக மின் கட்டணம் வருவதாக கூறப்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்கின்றனர், மின் வாரிய அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

LAYMAN
அக் 24, 2026 16:14

நுகர்வோரே ரீடிங் எடுக்கலாம் எனும்போது அதை மாதாமாதம் எடுத்து அப்லோட் செய்யலாமே? 60 நாட்கள் எதற்கு ?? மின் பயனாளர்களுக்கு கட்டண சுமை குறையுமே அதிகாரிகளும் , அரசும் சிந்திக்கலாமே


Vasan
அக் 24, 2026 03:33

மின்சார நுகர்வோரே சுயமாக ரீடிங் எடுக்கும் இந்த "நமக்கு நாமே ரீடிங்" திட்டத்தை வரவேற்கிறோம். இதனை அமல்படுத்த ஏதுவாக, மின்சார வாரியம் பொதுமக்கள் அனைவருக்கும் கேமரா மொபைல் போன் இலவசமாய் வழங்க கேட்டுக்கொள்கிறேன். முதல் கட்டமாக, ரேஷன் கார்டில் குறிப்பிட்டுள்ள குடும்ப தலைவருக்கு மட்டும் கொடுத்தால் போதும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை