சென்னை : ''நாம் எந்த சமயத்தையும் எதிர்ப்பவர்கள் அல்ல; அதே சமயம், நம்மையும், நம் சமயத்தையும் எதிர்ப்பவர்களை எதிர்ப்பது தான் தர்மம்,'' என, மஹாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.தருமையாதீனம் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், எஸ்.ஆர்.எம்., பல்கலை தமிழ்ப் பேராயம் சார்பில், சென்னை காட்டாங்குளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலையில், ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அதில், கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
சைவ சித்தாந்தம் என்றால், சமயக் குறவர்கள் நால்வரையும் நினைக்காவிட்டால், இந்த மாநாடு முழுமையடையாது. 'யார் மனமுருகி இறைவனை வேண்டுகிறானோ, அவன் மனமே கோவில்' என்றவர் அப்பர்.'உள்ளம் கவர் கள்வன்' தான் இறைவன் என்றவர் ஞானசம்பந்தர். அவர் தான், உலகத்துக்கு தேவையான ஞானத்தை, பக்தியால் புத்துயிர் ஊட்டியவர். 'நான் பல பிறவிகள் எடுத்து விட்டேன். இந்த பிறவியில் உன் திருவடிகளில் சரணாகதி அடைகிறேன்' என்றவர் மாணிக்கவாசகர். நான் உள்ளிட்ட பலரும் பின்பற்றுவது சுந்தரமூர்த்தி நாயனாரைத் தான். அவர் தான், இறைவனை பித்தா என்றவர்.அதாவது, பல தலைவர்களும், தலைவர்களாக தன்னை நினைத்துக் கொள்பவர்களும், தன்னை குறை சொன்னால், சொன்னவர் மீது சேற்றை வாரி இறைப்பதோடு, அவர்களை பித்தன் என்பவர்கள் தான் அதிகம்.ஆனால், சுந்தரமூர்த்தி நாயனார் அப்படிப்பட்டவர் அல்ல. அவர், இறைவன் என்பதை அறியாத போது, பித்தா என்றவர். இறைவனே என்னை பாடு என்ற போது, என்ன பாடுவது என சுந்தரர் திகைத்த போது, 'பித்தா' என்ற வார்த்தையில் பாடச் சொன்னதும், 'பித்தா பிறைசூடி' என்று பாடத் துவங்கினார்.நான், சுந்தரமூர்த்தி நாயனாரின் பிள்ளை என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அவர் அவினாசிக்கு வந்து, முதலை வாயில் இருந்து அந்தணச் சிறுவனை மீட்டது உண்மையா, பொய்யா என்பதை விவாதிக்கின்றனர். அவரின் குரு பூஜை விழாவிற்கு, எங்கள் அத்தை என்னை, 8 வயது சிறுவனாக இருந்த போது அவினாசி அழைத்துச் சென்றார். அங்கு, தாமரைக் குளத்தில் வழுக்கி விழுந்து மூழ்கினேன்; மூன்று முறை மேலே வந்தேன். மூன்றாவது முறை ஒருவர் என்னை கரையில் போட்டார்.என் அண்ணனும், அத்தையும் வந்த போது, என்னை ஒப்படைத்து விட்டு மறைந்து போனார். இதுவரை, அவரை காண முடியவில்லை. அவர் சுந்தரமூர்த்தி நாயனார் என்பது தான் என் நம்பிக்கை.பிரிட்டிஷாரை போல், நாம் நம் செயல்களை எழுதி வைப்பதில்லை. ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, 'நம் சாதனைகளை ஒரு குறும்படமாக எடுத்து, மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும்' என, காமராஜரிடம் ப.உ.சண்முகம் சொன்னார். அவர் செலவுத் தொகையைக் கேட்டு மறுத்து விட்டார். காமராஜரும் தோற்றுப் போனார். அதனால், சாதித்தவர்கள் வரலாறு வெளியில் தெரியாமலே போகிறது.'என் கடன் பணி செய்து கிடப்பதே' எனும் நாவுக்கரசரின் வாக்கை செயல்படுத்தும் வகையில், எல்லாருக்குமானதாக உள்ள சைவ சித்தாந்தத்தையும், தமிழையும் வளர்க்கும் தருமையாதீனத்தின் பணி பாராட்டுக்குரியது. நம் சமயங்கள் எந்த சமயத்துக்கும் எதிரிகள் அல்ல. அதேநேரம், நம் சமயத்தை எதிர்ப்பவர்களை எதிர்க்க வேண்டியது தான் தர்மம். தர்மம் சிதைக்கப்படும் போது எதிர்க்காவிட்டால், அவன் அதர்மம் செய்தவனாகிறான். அதனால் தான் ராமனும், கிருஷ்ணனும் யுத்தத்தில் ஈடுபட்டனர்.பொய்யையே மெய்யாக்கி பேசுவோரையும், அநீதியை நீதியாகப் பேசுவோரையும் நாம் தோற்கடித்தே ஆக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வாழ்க்கையை கொண்டாடியதமிழ் சங்க இலக்கியங்கள்இலங்கை சச்சிதானந்தம் பேசியதாவது:
உலக இலக்கியங்களிலேயே, தமிழனின் சங்க இலக்கியங்கள் தான் வாழ்க்கையை கொண்டாடியவை. அவை, காதல், வீரம், கொடை, இயற்கையை போற்றி உள்ளன. அவற்றை பின்பற்றி எழுதப்பட்டவை தான் திருமுறைகள். அவை கோவில், இறைவனை மட்டும் பாடாமல், அந்த ஊரின் அழகையும், அங்கு வாழும் மக்களையும், கலைஞர்களையும் தொழிலாளர்களையும், தொழில்களையும் போற்றியுள்ளன. அதனால், திருமுறைகள் அனைத்தும் தோத்திரப் பாடல்களாக இருந்த போதும், தோத்திரப் பாடல்கள் அனைத்தும் திருமுறைகள் ஆகி விடவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.புலவர் பட்டம்
'கலைமகள்' இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், தமிழ்ப் பேராயத் தலைவர் கரு.நாகராசன், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோருக்கு, தருமை ஆதீனப் புலவர் பட்டங்கள் வழங்கப்பட்டன 'பலன் தரும் திருமுறைப் பதிகங்கள், சந்தானாசாரியார் புராணம் மூலமும் உரைநடைச் சுருக்கமும், பேயார் ஆச்சி, சைவ சித்தாந்த சங்கிரகா, நந்தி யார், பாரதியார் இசைத் தமிழ்க்கொடை, சித்தாந்த சாத்திரம், நீதி இலக்கியம், சிற்றிலக்கியம், சங்க இலக்கியம்' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.மாநாடு நடந்த எஸ்.ஆர்.எம்., பல்கலையின் இணை வேந்தர் ரவி பச்சமுத்து பேசுகையில், ''தமிழையும், ஆன்மிகத்தையும் வளர்க்கும் நோக்கில், எஸ்.ஆர்.எம்., தமிழ்ப் பேராயம் அளப்பரிய பணிகளை செய்து வருகிறது,'' என்றார்.தமிழ்ப் பேராயத் தலைவர் கரு.நாகராசன் பேசுகையில், ''மனிதப் பண்புகள் இல்லாத அறிவாளி, மரத்துக்குச் சமம். மனிதப் பண்புகளை வளர்ப்பது, பக்தியும் ஆன்மிகமும் தான். அதனால், ஏற்கனவே பள்ளிகளில் இருந்த நீதி போதனை வகுப்புகளை மீண்டும் துவக்கி, ஆன்மிக, பண்பாட்டு வகுப்புகளை நடத்த வேண்டும்,'' என்றார்.பாரதி பாஸ்கர் பேசுகையில், ''மனிதருக்கு செய்யும் தொண்டு தான் இறைவனுக்குச் செய்யும் தொண்டு என்ற மனிதாபிமானத்தை கற்றுத் தந்தது தமிழ் இனம். அது, விதை நெல்லை அரிசியாக்கி, பசித்தோருக்கு விருந்து பரிமாறிய இனம்,'' என்றார்.தமிழை வளர்க்க தமிழ் கல்லுாரிகள்தமிழ் வளர்த்த சைவ சித்தாந்தம், ஆணவம், கன்மம், மாயை பற்றி பேசியது. சைவம் என்பது சிவம். நாம் சைவத்தையும், தமிழையும் வளர்க்க வேண்டும். தருமை ஆதீனத்தால், 1932ல் துவக்கப்பட்ட வகுப்புகளில் தேவாரம் பயின்றவர்கள், உலகம் முழுதும் ஓதுவார்களாக பணி செய்கின்றனர். இந்த மாநாட்டிற்கு, 1,000 கருப்பொருளில், 302 ஆய்வுக் கட்டுரைகள் வந்தன. அவை, நான்கு நுால்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இதற்கு, 13 நாடுகளின் சைவத் தமிழ் அறிஞர்கள் வந்த நிலையில், முதல் முறையாக 60 ஜப்பான் அறிஞர்களும் பங்கேற்றது சிறப்புக்குரியது. தமிழ்க் கல்லுாரிகளை திறந்து, தமிழக அரசு தமிழை வளர்க்க வேண்டும்.- தருமை ஆதீனம், 27வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
வேண்டியது ஆதீனத்தின் கடமை'
''சைவ சித்தாந்த கருத்துகளை எளியவர்களுக்கும் புரிய வைக்கும் வகையில், கருத்தரங்குகளை நடத்த வேண்டியது ஆதீனத்தின் கடமை,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பேசினார்.'சைவ சித்தாந்த சங்கிரகா' என்ற நுாலை, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் வெளியிட, 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு, 'ஊடகவியல் கலாநிதி விருது' வழங்கி கவுரவித்தார்.பின், நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பேசியதாவது:உலகில் உள்ள மதங்களுக்கெல்லாம் நிறுவனர் என, தோற்றுவித்தவர் பெயர் இருக்கும். அப்படி நிறுவனர் அல்லாத ஒரு மதம் ஹிந்து மதம். காரணம், அது ஒரு மதமே அல்ல; அது வாழ்வியல் அறிவியல். அறிவியலுக்கு நிறுவனர் இல்லாதது போல, ஹிந்து மதத்துக்கும் நிறுவனர் கிடையாது. அது ஆதியும், அந்தமும் இல்லாத மூத்த மதம்.அதன் நெறிமுறைகள், வாழ்வியல் கோட்பாடுகளை வலியுறுத்துகின்றன. தருமை ஆதீனத்தில், வேதங்களும், ஆகமங்களும் கற்பிக்கப்படுகின்றன. அங்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூகப் பணிகளும் நடக்கின்றன. நானும் அங்கு கல்வி கற்றிருக்கிறேன்.நான் நீதிபதியாக இருந்தாலும், சைவ சித்தாந்தத்தில் ஒரு பாமரன். என்னை போன்ற பாமரர்களுக்கு, சைவ சமய கருத்துகள், வழிபாட்டு முறைகளையும், அவை போதிக்கும் கருத்துகளையும் கற்பிக்கும் வகையில், இது போன்ற ஆராய்ச்சி மாநாடுகளுடன், பொது மக்களுக்கான கருத்தரங்கங்கள், மாநாடுகளையும் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.