திமுக கூட்டணியில் விரிசல்; எங்கள் கூட்டணியை பேச திமுவுக்கு தகுதியில்லை என்கிறார் இபிஎஸ்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சேலம்: ''திமுக கூட்டணியில் இப்போதே விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதிமுக கூட்டணி குறித்து பேச திமுவுக்கு தகுதி இல்லை'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.சேலத்தில் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: மக்கள் ஆதரவு உடன் அதிமுக ஆட்சி அமைத்து விவசாயிகளுக்கு எல்லா வகையிலும் நன்மை செய்யும். தவெக தொண்டர்கள் என் கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். கட்சி தலைமையின் அனுமதி பெற்று வர தவெகவினருக்கு அறிவுறுத்தி உள்ளோம். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே விமர்சனம் செய்கின்றனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் விமர்சனம் செய்கின்றனர். நாங்கள் பாஜ உடன் கூட்டணி வைத்ததில் இருந்து எங்களை பற்றி மட்டும் தான் விமர்சனம் செய்கின்றனர். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் இவர்களுக்கு என்ன? திமுக உடன் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. அந்த கட்சியின் தலைவர்கள் எல்லாம் எங்களை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. எங்களுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைக்கிறோம். எங்களது கட்சி 2 கோடி தொண்டர்கள் உள்ள கட்சி. அதற்கு தகுந்த மாதிரி கேள்வி கேளுங்கள். எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கட்சிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்பட முடியாது. காங்கிரஸ் கட்சி அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு கேட்டு குரல் கொடுக்க தொடங்கி விட்டது. திமுக கூட்டணியில் இப்போதே விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி குறித்து பேச திமுவுக்கு தகுதி இல்லை. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.