உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பருவம் தவறிய மழையால் பயிர்கள் பாதிப்பு; நிவாரணம் வழங்க ரூ.289 கோடி ஒதுக்கீடு

 பருவம் தவறிய மழையால் பயிர்கள் பாதிப்பு; நிவாரணம் வழங்க ரூ.289 கோடி ஒதுக்கீடு

சென்னை: 'தமிழகத்தில், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, நடப்பாண்டு பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, நிவாரணம் வழங்க 289 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது' என, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில், கடந்த 2024ல் பெய்த வடகிழக்கு பருவமழை, கடந்த ஜனவரி மாதம் பெய்த, பருவம் தவறிய மழை ஆகியவற்றால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், வருவாய் மற்றும் வேளாண்துறை வாயிலாக, கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அங்கு 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட, பயிர் பரப்பை உறுதி செய்து, மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து, நிவாரணத் தொகை தொடர்பாக அறிக்கைகள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. அதன்படி, 4.90 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்கள், 76,132 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் என, மொத்தம் 5.66 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு நிவாரணத் தொகையாக, 289 கோடி ரூபாய், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, விடுவிக்கப்பட்டு உள்ளது. இதனை, பாதிக்கப்பட்ட 3.60 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க, ஒப்புதல் வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட, 2.80 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்களுக்கு 254 கோடி ரூபாய், 80,383 ஏக்கர் தோட்டக்கலை பயிர்களுக்கு 35.2 கோடி ரூபாய் பிரித்து வழங்கப்படும். இந்த நிவாரணத் தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
டிச 25, 2025 08:03

என்ன புதுசா ரீல் விட்றாரு. இந்த ஆண்டுதான் மழை பருவம் தவறாமல் பொழிந்து செழிப்பாகத்தானே இருக்கு. 289 கோடி ஒதுக்கீடெல்லாம் நம்பும் படியாக இல்லையே. ஆட்சி முடிவதற்குள் கஜானாவை எவ்வளவு காலி செய்ய முடியுமோ, செஞ்சு தங்களது பைகளை நிரப்பிக்கொள்ளும் திட்டம் போல் தெரிகிறது.


சமீபத்திய செய்தி