சென்னை: டில்லி, உத்தராகண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், சைபர் குற்றவாளிகள் 'கால்சென்டர்' நடத்தி, வேலைக்கு ஆட்களை எடுத்து, பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.தமிழக சைபர் குற்றப்பிரிவு தலைமையக போலீஸ் அதிகாரிகள், 'ஆப்பரேஷன் ஹைட்ரா' என்ற பெயரில், தேசிய அளவில் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, டில்லி, உத்தராகண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஒரு பெண் உட்பட ஏழு பேரை கைது செய்தனர். இவர்கள், திருமண இணையதளத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளை போல நடித்தும், கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவது போலவும், பங்கு சந்தை முதலீடு ஆசை காட்டியும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. சில தினங்களுக்கு முன், மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக போலீசார், சைபர் குற்றங்கள் தொடர்பாக மாவட்ட வாரியாக பதிவான வழக்குகளின் அடிப்படையில், 'திரைநீக்கு' என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சைபர் குற்றவாளிகள் 136 பேர் கைது செய்யப்பட்டனர்.இதுகுறித்து, சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் கூறியதாவது:டில்லி, உத்தராகண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், சைபர் குற்றவாளிகள் கால் சென்டர்கள் நடத்தி, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து, பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதம் 8,000 முதல் 15,000 ரூபாய் வரை சம்பளம் தருவதாக வேலைக்கு ஆட்களை சேர்க்கின்றனர். அவர்களுக்கு மாதந்தோறும், 'டார்கெட்' நிர்ணயம் செய்து, அந்த தொகையை மோசடி செய்து கொடுத்தால் தான், சம்பளம் தரப்படும் என்றும் கறாராக கூறி விடுகின்றனர்.புதிதாக வேலைக்கு சேரும் நபர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக எப்படி பண மோசடியில் ஈடுபடுவது என்றும் பயிற்சி அளிக்கின்றனர். ஏழ்மை காரணமாக வேலைக்கு சேரும் நபர்களை அடிமை போல நடத்துகின்றனர். அத்துடன், பொதுமக்கள் சிலரிடம் கமிஷன் பேசி, அவர்களின் வங்கி கணக்குகளை மோசடிக்கும் பயன்படுத்துகின்றனர்.சைபர் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 125 மொபைல் போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. சைபர் குற்றவாளிகள் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தோரிடம், பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துஉள்ளது. 'ஸ்மார்ட் போன்' மற்றும் கணினியை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.