உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு வழங்க டான்பாமா விண்ணப்பம்

சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு வழங்க டான்பாமா விண்ணப்பம்

சிவகாசி: சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு கேப் வெடி பட்டாசு உற்பத்தியாளர்கள் - டான்பாமா, சங்கம் விண்ணப்பித்துள்ளது.கடந்த, 1923 முதல் மத்தாப்பூ, ஓலை வெடி, சிட்டு புட்டு ரக பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு தற்போது சிவகாசியில் 300க்கும் மேற்பட்ட பட்டாசு வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது சிவகாசி, விருதுநகர், சாத்துார் வெம்பக்கோட்டைசுற்று வட்டார பகுதிகளில் 1,080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் மத்திய பெட்ரோலியம், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகளில் 90 சதவீதத்திற்கும் மேல் சிவகாசியில் தான் உள்ளன. பட்டாசு தொழில் வாயிலாக நேரடியாகவும், மறைமுகமாகவும் எட்டு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி செய்யப்படும் சிவகாசியில் பட்டாசு வர்த்தகம் ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.

தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்படும் நிலையில், பட்டாசுகளை கப்பலில் கொண்டு செல்வதற்கான அனுமதி இல்லாததால் ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் 'டான்பாமா' சார்பில் டில்லியில் மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேட்டு அலுவலகத்தில், சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு வழங்க கோரி விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது.இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு உள்ளது. அதில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவா, சம்பா வத்தலுக்கு அடுத்ததாக முக்கிய அடையாளமான சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்து உள்ளது தொழிலாளர்கள், மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து டான்பாமா தலைவர் கணேசன் கூறுகையில், ''சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு கிடைத்தால் சட்டப்பூர்வ பாதுகாப்பு, சர்வதேச வர்த்தகத்தில் முன்னுரிமை கிடைக்கும். இதன் வாயிலாக வேலைவாய்ப்பு பெருகி சீன பட்டாசுகள் ஒழிக்கப்பட்டு, சிவகாசி பட்டாசுக்கு சந்தையில் மதிப்பு மேலும் உயரும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

c.mohanraj raj
மே 28, 2025 21:17

சீன பட்டாசுகளை தடை செய்தது மத்திய அரசு இரண்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டது


உண்மை கசக்கும்
மே 28, 2025 11:23

சரித்திரம் தெரியுமா.. பல ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசிகாரர் ஒருவர் சீனாவிற்கு சென்று பட்டாசு தொழில் நுட்பம் கற்று கொண்டு வந்து இங்கு ஆரம்பித்தார். காப்பி அடித்ததக்கு எல்லாம் புவிசார் கொடுப்பாய்ங்களா


RAVINDRAN.G
மே 28, 2025 10:02

பலகுடும்பங்கள் பிழைக்கிறது இந்த பட்டாசு தொழிலால். ஆகவே விரைந்து அனுமதி கொடுக்கவேண்டும். அதன்மூலம் அந்நிய செலாவணி ஈட்டமுடியும்.தரமான பொருட்களுக்கு உரிய விலையும் கிடைக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை