உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு கட்டணம் வழங்க கெடு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு கட்டணம் வழங்க கெடு

சென்னை:கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆஜரான, அரசு சிறப்பு பிளீடரான மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை, மூன்று வாரங்களில் வழங்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஓமலுாரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ்; 2015ல் ஆணவ கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதில், யுவராஜ் உட்பட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை உறுதிசெய்த சென்னை உயர் நீதிமன்றம், மற்ற இருவரின் தண்டனையை குறைத்தது. இந்த கொலை வழக்கில், அரசு சிறப்பு பிளீடராக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் நியமிக்கப்பட்டு இருந்தார். உயர் நீதிமன்றத்திலும் அரசு வழக்கறிஞராக வாதங்களை முன்வைத்தார்.இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு பிளீடராக பணியாற்றியதற்கான கட்டணத்தை வழங்க, அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ப.பா.மோகன் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், 'வழக்கறிஞர் மோகனின் கோரிக்கை மனு உடனே பரிசீலிக்கப்பட்டு, நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் கட்டணம் வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கறிஞர் கட்டணத்தை மூன்று வாரங்களில் வழங்க உத்தரவிட்டார். கட்டணம் வழங்கியது குறித்து, வரும் 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி