உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழிலாளர் நலவாரியங்களை மறுசீரமைக்க கோரிக்கை

தொழிலாளர் நலவாரியங்களை மறுசீரமைக்க கோரிக்கை

திருப்பூர்: ''தொழிலாளர் நலவாரியங்களை மறுசீரமைப்பு செய்து, கர்நாடகாவில் இருப்பது போல, மூன்று வாரியங்களாக ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்,'' என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில், 17 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் செயல்படுகின்றன. விபத்து மரணம், இயற்கை மரணம், விபத்து பாதிப்பு, ஈமச்சடங்கு, கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவி என, பல்வேறு நல உதவிகள், இந்த வாரியங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. ஆனாலும், அதற்கான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் அதிகம் என்பதால், எதிர்பார்த்தப்படி தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் பயன் பெறுவது கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனவே, அனைத்து தொழிலாளர்களும் எளிதாக பயன்பெறும் வகையில், தொழிலாளர் நலவாரியங்களை ஒருங்கிணைத்து, கர்நாடகாவில் இருப்பது போல செயல்படுத்த வேண்டுமென, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. உள்ளாட்சிகளில், கட்டட உரிம கட்டணத்தில் இருந்து, 1 சதவீதம் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்துக்கு செல்கிறது. ஆட்டோ, கார் விற்பனை மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை வாயிலாக, ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்துக்கும், நிரந்தர நிதி வருவாய் கிடைக்கிறது. மற்ற நலவாரியங்கள், அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில் இயங்கி வருகின்றன. திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலவாரிய கண்காணிப்பு குழு உறுப்பினர் சிவசாமி கூறுகையில், ''கட்டுமான தொழிலாளர்களுக்கு, 4 லட்சம் ரூபாய் மானியம், ஆண்டுக்கு, 10,000 வீடுகள் கட்டும் திட்டம் கைகொடுக்கவில்லை. ''ஏழை தொழிலாளர் பயன்பெறும் வகையில், வாரியங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். கர்நாடகாவில் இருப்பது போல, கட்டுமானம், ஆட்டோ மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியம் என, மூன்று நலவாரியங்களாக ஒருங்கிணைக்க வேண்டும். ''மாநில ஜி.எஸ்.டி., வருவாயில், 1 சதவீதத்தை வாரியத்துக்கு ஒதுக்கினால், வாரியங்கள் பயனுள்ள வகையில் இயங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !