பசும்பொன்னில் தேவர் அரங்கம்; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
சென்னை : பசும்பொன்னில், 1.55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், 1.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக அரங்கம் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு, முத்துராமலிங்க தேவர் அரங்கம் என, அரசு பெயர் சூட்டியுள்ளது. இந்த அரங்கத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். நாளை முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொது மக்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர், பசுபொன்னில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தஉள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், வெயில் மற்றும் மழையில் இருந்து மக்களை பாதுகாக்கவும், இந்த அரங்கம் கட்டப்பட்டு உள்ளது. இந்த அரங்கத்தின் மொத்த பரப்பளவு 9,848 சதுரடி. காத்திருப்பு கூடமும், மிக முக்கியமான பிரமுகர்களுக்கான நிரந்தர நிழற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு கூடத்தில், 500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள் தனித்தனியாக வரிசையில் செல்வதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதியும், சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மேடை, மின் விளக்கு, மின் விசிறி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமை செயலர் முருகானந்தம், செய்தித்துறை இயக்குனர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.