உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாய் நிர்வாகம் வலுப்பெற அவசியம் டிஜிட்டல் சர்வே பணி

வருவாய் நிர்வாகம் வலுப்பெற அவசியம் டிஜிட்டல் சர்வே பணி

மதுரை : வருவாய் நிர்வாகம் மேம்பட 'டிஜிட்டல் சர்வே' பணியை தனியாரிடம் ஒப்படைக்காமல் வருவாய்த்துறையினரே நேரடியாக ஈடுபட வேண்டும். வருவாய் நிர்வாகத்தின் அடிப்படை கிராம நிர்வாகப்பணி. இதில் ஆர்.ஐ., எனும் வருவாய் ஆய்வாளரின் அதிமுக்கிய பணி நிலத்திற்கு நேரடியாக சென்று பயிர்மேலாய்வு செய்வது. 50 ஆண்டுகளுக்கு முன் கிராம கர்ணமும், ஆர்.ஐ.,யும், கிராம உதவியாளர் துணையுடன் ஆண்டுக்கு 2 முறை நிலங்களை பார்வையிட்டு சாகுபடி பயிர் விவரங்களை அடங்கலில் பதிவர். வருவாய் ஊழியர் இப்பணியில் ஈடுபடுவதன் மூலம் பணித்திறனை மேம் படுத்தி திறன்மிக்கவர் களாக திகழ முடியும். 1980 க்கு பின் பகுதி நேர கிராம கர்ணம் பணி ஒழிக்கப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு ஆர்.ஐ., வசம் கிராம நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பணிப்பளுவை காட்டி பயிர் விவரங்களை நேரடியாக சென்று பதிய விடாமல் அலுவலகம் வரும் பொதுமக்கள் சொல்வதையே அடங்கலில் பதிவிட்டனர். இதனால் பயிர்சாகுபடி விவரத்தின் உண்மைத் தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த விவர அடிப்படையில் தான் அணைகளில் தண்ணீர் திறப்பு முதல், காப்பீடு, மானியம், கடன்கள் என பயிர்த்திட்டங்களை அரசு வகுக்கிறது. 45 ஆண்டுகளாக இந்நிலைதான் நீடிக்கிறது. இச்சூழ்நிலையில் 'டிஜிட்டல் கிராப் சர்வே' பணியை வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஆகியோரைக் கொண்டு செயல்படுத்த அரசு திட்டமிட்டது. இப்பணியால் சுமை இன்னும் அதிகரிக்கும் என வருவாய்த்துறையில் பல சங்கங்கள் இதற்கு முட்டுக்கட்டை போடுகின்றன. நிலவிவரப்பதிவு, பயிர்விவர பதிவு, நில நிர்வாகம், நிலஅளவை போன்றவற்றில் அனுபவ அறிவு பெற்றால் தான் தங்கள் பணியின் திறன், தரம் மேம்பட்டதாக இருக்கும் என்பதை அறியாமல் இந்த சர்வே பணிக்கு ஒத்துழைக்க தயங்குகின்றன. வருவாய் நிர்வாக ஆணையரக அதிகாரிகள் இச்சிக்கல்களை அறிந்து அதனை களைய முயற்சிக்கவில்லை. மாறாக டிஜிட்டல் கிராப் சர்வே பணியை தனியார் வசம் கொடுத்து செயல்படுத்த உள்ளனர். அவ்வாறு செய்தால் வருவாய்த்துறை நிர்வாகம் மக்களை விட்டு விலகும் நிலைதான் ஏற்படும். வருவாய்த்துறையின் நன்மதிப்பும், தரமும் குறையும். வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்க முன்னாள் மாநில செயலாளர் சந்திரமோகன் கூறியதாவது: வருவாய் ஊழியர்கள் பயிர் மேலாய்வு பணியை அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி செய்யத்தவறிவிட்டனர். இதனால் வீட்டுமனைகளான நிலங்களின் பரப்பு குறித்த புள்ளிவிவரம் அரசிடம் இல்லை. இதனால் இந்த வீட்டுமனை பகுதிக்கான தண்ணீரை உபரி நீராக கருதி வேறு தரிசு நிலங்களை மேம்படுத்த கொண்டு செல்வதில்லை. மாறாக அது வீணாகிறது என்பது தான் உண்மை. இதுபோன்ற வழிகாட்டுதல்படி செயல்படாத வருவாய்த்துறை பணிகளால் குவாரிகள், பட்டாசு தொழில்களில் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. இவ்வாறு வருவாய்த்துறை பணியில் தரமின்மையை கருத்தில் கொண்டு, டிஜிட்டல் கிராப் சர்வே பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். வருவாய் அலுவலர்களைக் கொண்டே அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை