உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழுதான பள்ளி கட்டடங்களை பயன்படுத்த கூடாது: அமைச்சர்

பழுதான பள்ளி கட்டடங்களை பயன்படுத்த கூடாது: அமைச்சர்

சென்னை:“பள்ளிகளில் பழுதான கட்டடங்களின் அருகில் மாணவர்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது,” என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.சென்னை, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தை, அமைச்சர் மகேஷ், நேற்று ஆய்வு செய்தார். பின், தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் இனி, வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும். அதனால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது நம் கடமை. அதனால், முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், அனைத்து தலைமை ஆசிரியர்களுடனும் தொடர்பில் இருக்க வேண்டும். காலாண்டு விடுமுறையின்போது, பழுதான கட்டடங்களை பொதுப்பணித் துறை வாயிலாக அகற்றும்படி உத்தரவிட்டிருந்தோம். அவ்வாறு அகற்றப்படாத கட்டடங்கள் இருந்தால் அவற்றை விரைவாக அகற்ற வேண்டும். பழுதான கட்டடங்களை யாரும் பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள், அக்கட்டடங்களுக்கு அருகில் செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும். பாட வேளையில், மாணவர்கள் வகுப்பில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். நீர் நிரம்பியுள்ள இடங்களுக்கு விளையாடச் செல்வதையோ, நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதையோ தவிர்க்கும்படி, மாணவர்களிடமும், பெற்றோரிடமும் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், பள்ளிக்கல்வி துறை செயலர் மதுமதி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக்கான மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ