சிவகங்கை : ஆடு, மாடுகள் இலவசமாக வழங்கும் அரசின் திட்டத்தால், கிராமங்களில் ஆடு, மாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை, செப்., 15 முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, ஒரு லட்சம் குடும்பங்களுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படும். பயன் பெறும் பயனாளிகள், 3 பெண் ஆடு, ஒரு ஆண் ஆடு வாங்க வேண்டும். இதற்காக ஆடு ஒன்றிற்கு தலா, 2,500 ரூபாயும், பராமரிப்பு, கொட்டகை, தீவனம் உள்ளிட்டவைகளுக்கு, தலா, 500 ரூபாயும் வழங்கப்படும். வாங்கப்படும் ஆடுகள், ஆறு மாத குட்டியாக இருக்க வேண்டும். பயனாளிகள் ஆடுகளை வாங்கும் போது கால்நடை டாக்டர் பரிசோதித்து, அவற்றிற்கு நோய் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். இத்திட்டத்திற்கு தேவையான ஆடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பயனாளிகள் கிராமப்புற புரோக்கர்களை அணுக வேண்டியதுள்ளது. ஆடு புரோக்கர் கந்தசாமி கூறுகையில், ''மாநில அளவில் வெள்ளாடு, செம்மறி ஆடுகள் தலா ஒன்றரை கோடி உள்ளது. அரசு அறிவித்துள்ள ஆடு வழங்கும் திட்டத்தால், அவற்றுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. சந்தையில், 5 கிலோ ஆட்டின் விலை, 1,000 ரூபாய், 8 கிலோ, 1,300, 10 கிலோ, 1,600, 15 கிலோ, 2,200, 20 கிலோ, 3,200 வரை விற்கப்படுகிறது,'' என்றார். அதிகாரி ஒருவர் கூறுகையில், ''உள்ளூரில் ஆடு, மாடு வளர்ப்பவர்கள் வீடுகளில் ஒன்று, இரண்டு, மூன்று என வைத்திருப்பதால், கூடுதல் விலை சொல்கின்றனர். விலை அதிகம் இருப்பதால், பயனாளிகள், பக்கத்து மாநிலங்களுக்கு சென்று வாங்குகின்றனர்,'' என்றார்.