நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவர் சிவராசு, 35. பட்டதாரியான இவர், ஆதிதிராவிட நலத்துறை தலைமை அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த மன உளைச்சல் நிகழ்வை குமுறலாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது பரவி வருகிறது.நம் நாளிதழுக்கு சிவராசு அளித்த பேட்டி:எங்கள் ஊராட்சியில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் புறம்போக்கு இடங்களில் நான்கு ஆண்டுகளாக குடியிருக்கும் ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க பலமுறை கோரிக்கை வைத்தோம்; பதில் இல்லை. சமுதாய கூடம்
அயோத்திதாசர் பண்டிதர் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சி ஆதிதிராவிட குடியிருப்புகளுக்கு சாலை, எரிமேடை மற்றும் சமுதாய கூடம் வேண்டியும் விண்ணப்பம் அளித்திருந்தோம். அதற்கும் நடவடிக்கை இல்லை.கோரிக்கைகளுக்காக, சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை அலுவலக இயக்குனரை சந்திக்க, திருச்சி, கிருஷ்ணாபுரம் ரம்யா, கடலுார், சி.முட்லுார் வேதநாயகி, கோயம்புத்துார், கெம்மரம்பாளையம் செல்வி நிர்மலா மற்றும் நான் உட்பட நான்கு பஞ்., தலைவர்கள் சென்றிருந்தோம்.ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்த பஞ்சாயத்து தொடர்பான பிரச்னைகளுடன் வந்திருந்தனர். இயக்குனரின் நேர்முக உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் எங்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை; படு அலட்சியமாக நடத்தினர். அதே சமயம், அவர்களை 'கவனித்தவர்கள்' ராஜ மரியாதையுடன் உள்ளே சென்று வந்தனர்.காத்திருப்பு எனக்கு புதிதல்ல. சில அலுவலகங்களில் காலை முதல் இரவு வரை காத்திருந்த அனுபவம் உண்டு. இரவு பஸ்சிற்கு செல்ல வேண்டும்; மிரட்டும் வானிலையால், நாங்கள் ஊராட்சியில் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துக் கூறியும் பலனில்லை. இயக்குனரிடம் மனுவை அளிக்காமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினோம்.இயக்குனரின் உதவியாளரிடம், ஊராட்சி மன்ற தலைவர் எனக் கூறியும் பல்வேறு காரணங்களை கூறி அடுத்தக்கட்ட அலுவலர்களை சந்திக்க கூறினார். அனைவரையும் சந்தித்த பின் உடன்பாடு ஏற்படாததால் இயக்குனரை சந்திக்க வேண்டும் என, மூன்று மணி நேரம் காத்திருந்தேன். வேதனை
ஒரு சில அலுவலகங்களில் ஒருநாள் முழுதும் காத்திருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து இருக்கிறேன். நாகையில் இருந்து 350 கி.மீ., துாரம் உள்ள சென்னைக்கு பயணித்து, இயக்குனரை சந்திக்காமல் தான் திரும்பினேன்.மக்களின் ஓட்டுகளை பெற்ற எம்.பி.,க்கோ, எம்.எல்.ஏ.,வுக்கோ கிடைக்கும் அங்கீகாரம் பஞ்., தலைவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மாநில அளவிலான ஒரு அலுவலகத்தில் ஒரு இயக்குனரை சந்திப்பது, மக்கள் பிரதிநிதிகளுக்கே இவ்வளவு கஷ்டம் என்றால், சாமானியன் எவ்வாறு சந்திப்பது?இயக்குனர் அலுவலக கதவுகளுக்கு பின்னால் நடைபெறும் நிர்வாகம் இவ்வாறு முறைகேடாக இருப்பின், அவர் தன் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அலுவலகங்களை எவ்வாறு வழி நடத்த இயலும். கடைநிலை மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு துறை, இவ்வாறு அறமற்று இயங்குவது வேதனைக்குரியது.அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த, டிஜிட்டல் மயமாக்குவதும், அரசு அலுவலர்களின் பங்களிப்பையும், செயல்திறனையும் அறியும் வண்ணம் தனியார் நிறுவனங்களை போல் தர நிர்ணயங்களை உறுதிப்படுத்துவதுமே இதற்கெல்லாம் நிரந்தர தீர்வாகும்.இவ்வாறு கூறினார்.