உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.ஐ.ஆர்.,க்கு எதிராக தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆர்.,க்கு எதிராக தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்

சென்னை: எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சீராய்வு பணியை உடனே கைவிட வலியுறுத்தியும், தமிழகம் முழுதும், தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை தங்கசாலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய முதல் மாநிலம் தமிழகம். இது ஒரு மறைமுக செயல் திட்டம். '' தற்போது செயல்படுத்துவது பா.ஜ.,வின் திட்டம் அல்ல; ஆர்.எஸ்.எஸ்., செயல் திட்டம். ஒரே நேரத்தில் பல மாங்காய்களை அடிக்கக்கூடிய வேலைகளை, ஆர்.எஸ்.எஸ்., செய்கிறது,'' என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ.சண்முகம் பேசுகையில், ''பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆட்டுவிக்கிற பொம்மையாக தேர்தல் கமிஷன் மாறி உள்ளது. ''ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மக்கள் விரோத செயலில், தேர்தல் கமிஷன் ஈடுபடுகிறது. டில்லியில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்,'' என்றார். சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர், தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டங்களில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வில்லத்தனத்தோடு

அரங்கேறும் திருட்டுத்தனம்

வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியை, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களி ல் மட்டுமே மத்திய பா.ஜ., அரசு செயல்படுத்துகிறது. தற்போது தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட தேர்தல் வரும் மாநிலங்களை குறிவைத்து வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் நடக்கிறது. தமிழகத்தில் தான், எளிதாக வில்லத்தனத்தோடு திருட்டுத்தனம் செய்ய முடியும். சிறுபான்மையினர், பெண்கள் ஓட்டுகளை ரத்து செய்துவிட்டு, வெளிமாநில ந பர்கள் மற்றும் பா.ஜ., ஆதரவாளர்கள் ஓட்டுகளை சேர்க்கும் நோக்கில் வாக்காளர் திருத்தப்பணி நடக்கிறது. ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள், இந்தப் பணியை மேற்கொள்வோரிடம் கவனமாக இருக்க வேண்டும். நியாயமாக செயல்படுகின்றனரா என கண்காணிக்க வேண்டும். -பொன்முடி துணைப் பொதுச்செயலர், தி.மு.க.,

மக்களின் ஓட்டுரிமையை

பாதுகாத்திடுவோம்

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை தடுப்பதே, நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை. ஒரு புறம், மக்களாட்சியின் அடிப்படையான ஓட்டுரிமையையே பறிக்கும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி எனும் ஆபத்துக்கு எதிராக சட்டப் போராட்டம்,- களப் போராட்டம். மறுபுறம், துவக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், குளறுபடிகளை தடுத்திட 'வார் ரூம்' உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. களப் போராட்டத்தில் தமிழகம் முழுதும், நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில், பதாகைகளை ஏந்தியும்-, கண்டன முழக்கங்களை எழுப்பியும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி எனும் பேராபத்துக்கு எதிராக கூடியுள்ளனர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர். தொடர்ந்து செயலாற்றுவோம். நம் மக்களின் ஓட்டுரிமையை பாதுகாப்போம். - ஸ்டாலின் தமிழக முதல்வர்

'அங்கிள், டிங்கிள்' வசனம் பேச

சினிமா அல்ல மக்கள் மன்றம்

நான் ஒரு கிராமத்துக்காரன். வீட்டில் ஒருவர் இறந்து விட்டால், எல்லோரும் பகை மறந்து, அந்த வீட்டிற்கு செல்வதுடன், சடலத்துடன் மயானம் வரை சென்று, இரங்கல் தெரிவிப்பது வழக்கம். மறுநாளோ, மூன்றாம் நாளோ, தொலை துாரத்திலிருந்து வந்தால், இறந்தவரின் படத்திற்கு பூ துாவி, இரங்கல் தெரிவிப்பது, நடுகல் நடுவது வழக்கம். ஆனால், ஒரு மனிதர், 45 நாள் கழித்து, என்னை பார்க்க வாருங்கள் என, உயிர் பலியானவர்களின் குடும்பத்தினரை வரவழைத்தார். என்னை பார்க்க வாருங்கள் என, ஆண்டவன் கூட சொல்ல மாட்டான். துளியளவு குற்ற உணர்ச்சி இல்லாமல், அணு அளவும் பொறுப்புணர்ச்சி இல்லாமல், சினிமாவில் வசனம் பேசுவது போல், மேடையில் வசனம் பேசுகிறார். 'அங்கிள்' சொல்லுங்க என்கிறார். என்னய்யா, அங்கிள், டிங்கிள். சினிமாவில் நடிக்கிறாயா; மக்கள் மன்றத்திற்கு வந்திருக்கிறாய். என்ன நெஞ்சழுத்தம் இருந்தால், அகம்பாவம் இருந்தால் அங்கிள் என, தொடர்ந்து சொல்வாய். - வைகோ பொதுச் செயலர், ம.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை