நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல் தி.மு.க., நாடகம்; அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை:'டாஸ்மாக்' ஊழல் விசாரணைக்கு தடை கேட்டும், கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரணையை தடுக்கவும், நீதிமன்றம் செல்லும் தி.மு.க., அரசு, 'நீட்' தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்து கட்சி கூட்டம் என்று நாடகமாடுவது ஏன்?' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை:'நீட்' தேர்வு வந்த பின், தமிழகத்தில் சாமானிய குடும்ப பின்னணி உடைய மாணவர்களும், அரசு பள்ளி மாணவர்களும், மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும், மருத்துவக் கல்லுாரிகளின் வருமானத்துக்காக, தி.மு.க., நீட் தேர்வை எதிர்க்கிறது. அக்கட்சி முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தாங்கள் நடத்தும் மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையில், எப்படி பணம் விளையாடுகிறது என, வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின், இன்னும் நீட் எதிர்ப்பு என, பல நாடகங்கள் நடத்தி, மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார். அப்படி ஒரு நாடகமான, அனைத்து கட்சி கூட்டத்தில், பா.ஜ., பங்கேற்கவில்லை. 'நீட்' தேர்வை நாடு முழுதும் அமல்படுத்தியது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. 'நீட்' தேர்வு வேண்டாம் என்ற எண்ணம், தி.மு.க., அரசுக்கு இருக்குமானால், உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக முறையிட்டிருக்க வேண்டும். 'டாஸ்மாக்' ஊழல் விசாரணைக்கு தடை கேட்டும், கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரணையை தடுக்கவும், நீதிமன்றம் செல்லும் தி.மு.க., அரசு, நீட் தேர்வுக்காக, நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்து கட்சி கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறது. நீட் தேர்வு குறித்து. தி.மு.க., கூறுவது, உண்மைக்கு நேர்மாறாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கான, எந்த ஆதாரங்களையும் இதுவரை முன்வைக்கவில்லை. நீட் தேர்வு வந்த பின், மருத்துவ கல்வி பயிலும், அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. நீட் தேர்வு மட்டுமல்ல, எந்த தேர்வானாலும், நம் மாணவர்கள் சாதனை படைக்கும் திறமை வாய்ந்தவர்கள். ஆண்டுதோறும் நீட் தேர்ச்சி விகிதமே இதற்கு சாட்சி. எனவே, முதல்வர் நீட் எதிர்ப்பு என்ற பெயரில் ஆடும் சுயநல நாடகம் போதும். இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்திவிட்டு, மாணவர்களை நிம்மதியாக படிக்க விடுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.