வால் போஸ்டர்களை மாற்றுவதே தி.மு.க. அரசின் சாதனை; பா.ஜ. மாநில தலைவர் குற்றச்சாட்டு
பொள்ளாச்சி,; ''தி.மு.க. அரசு, வெறும் வால்போஸ்டர் மாற்றுவது தான் சாதனையாக உள்ளது,'' என பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சிங்காநல்லுாரில் முன்னாள் தி.மு.க. ஊராட்சி தலைவர் ரமேஷ் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள், பா.ஜ. கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.அதில், பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் இருந்தாலும், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்தவர் பிரதமர் மோடி. அமெரிக்கா இந்தியாவின் மீது, 50 சதவீத வரி விதித்ததால்,தொழில்கள் பாதிக்கப்பட்டன. உடனடியாகபிரதமர் மோடி ரஷ்யா, சீனா சென்றார்.அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களை எல்லாம் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்தார். தமிழகத்தில் வீட்டு வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழக முதல்வர் இதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் என வால்போஸ்டர் மாற்றுவது மட்டும் தான் தி.மு.க. அரசின் சாதனையாக உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். பா.ஜ. தேர்தல் பார்வையாளர் அரவிந்த் மேனேன், பா.ஜ. மாவட்ட, ஒன்றிய, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வெள்ளை அறிக்கை வெளியிடணும்
மாநில தலைவர் நாகேந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், வர்த்தக அணி அமைப்பாளராக இருந்த ரமேஷ், மற்றும் உறுப்பினர்கள், பா.ஜ.வில் சேர்ந்துள்ளனர். இது பிரதமர் மோடியின் ஆட்சிக்கு அத்தாட்சியாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க. அரசின் வேதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்வேன்.அ.தி.மு.க. - பா.ஜ. இயற்கையான, தேசிய சிந்தனையோடு உள்ள கூட்டணி. தி.மு.க.வுக்கு எதிராக செயல்படுவோர் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்க்க செல்வதாக கூறும் முதல்வர், இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.