உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாராய விற்பனையில் திமுக அரசு கவனம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சாராய விற்பனையில் திமுக அரசு கவனம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மது விற்பனை உச்சம் பெற்றுள்ளது என்றால், அரசு இயந்திரத்தின் மொத்த வளங்களையும் கவனத்தையும் சாராய விற்பனையில் தான் திமுக செலவழித்துள்ளது என்பது தானே அர்த்தம்? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் 789 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கோர முகத்தை நமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றன. சாதாரண நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழகத்தில், பண்டிகை நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ, மக்களின் மகிழ்ச்சியும் நிம்மதியும் குலைந்துவிடுமோ என நாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில், சம்பந்தப்பட்ட திமுக அரசும் அதை இயக்கும் முதல்வர் ஸ்டாலினும் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது.அதுவும் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மது விற்பனை உச்சம் பெற்றுள்ளது என்றால், அரசு இயந்திரத்தின் மொத்த வளங்களையும் கவனத்தையும் சாராய விற்பனையில் தான் திமுக செலவழித்துள்ளது என்பது தானே அர்த்தம்?மழை வெள்ளத்தால் ஆங்காங்கே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது, தேனியில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மீண்டபாடில்லை, அத்தியாவசியப் பொருட்களுக்கு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, 90% மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாகக் கூறிய சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது, முறையான சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் விளைவித்த பயிர்கள் மழையில் நனைந்து முளைப்பு கட்டிப் போயுள்ளது, டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கிருந்த பயிர்களும் சேதமாகியுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித சேதமுமில்லாமல், மதுவை சிறிதும் தொய்வின்றி விற்பனை செய்துகொண்டிருக்கிறது திமுக அரசு. இதுதான் நாடு போற்றும் நல்லாட்சிக்கான இலக்கணமா? இவ்வாறு அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சம்பந்தமேஇல்லை

கோவையில் நிருபர்களை சந்தித்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 கமிஷன் கேட்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை வைக்க முடியாத நிலை இருக்கிறது. சட்டசபையில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கும், அளிக்கப்படும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. ரூ.890 கோடிக்கு மது விற்பனை செய்தது மட்டும் தான் திமுக அரசு செய்த சாதனை. சாதி ரீதியில் படம் எடுப்பது சரியில்லை. எனக்கு பைசன் பற்றி தெரியாது. பைசல் மட்டுமே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

T.sthivinayagam
அக் 22, 2025 19:59

குஜராத்தை போலவா. அதாவது குஜராத் மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தின் சுய்காம் தாலுகாவில் உள்ள தனனா கிராமத்தை போலவா.


Palanisamy T
அக் 22, 2025 19:08

நீங்கள் சொல்வது சரி. மக்களிடம் இருக்கவேண்டிய கவலை. தமிழக அரசுதான் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். மாறாக திமுக அரசு அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் அரசுக்கு இந்த பண்டிகைக் காலங்களில் மட்டும் அரசுக்கு சுமார் 800 கோடி வருமானம். ஒவ்வொரு பைசாவும் மக்களின் நலத் திட்டங்களுக்காக மீண்டும் அரசின் கஜானாவிற்கு போய்ச் சேரவேண்டும் இதில் திமுகவினர் மகிழ்ச்சியடைய எந்த காரணமுமில்லை . இந்த குழப்பங்களுக்கு நீங்கள்தான் மக்களிடம் வெளிப்படையாக பதில் சொல்லவேண்டும். வரும் தேர்தலுக்குமுன் மக்களிடம் பதில் சொல்வீர்களென்று நம்புகின்றேன். அல்லது பிரச்சாரமாவது செய்யுங்கள்.


திகழ்ஓவியன்
அக் 22, 2025 18:22

அன்னே உங்க UP தான் TOP இந்தியாவில் முதன்மை மாநிலம் இதில் 2000 கோடி அப்படி இருந்தும் எங்கள் வரி பணம் தான் அங்கிட்டு போது


spr
அக் 22, 2025 17:45

நம்பிக்கை நட்சத்திரம் போலத் தோன்றிய திரு அண்ணாமலை எரி நட்சத்திரமாக காணாமற் போய்க் கொண்டிருக்கிறார் தமிழகத்தில் ஏதாவதொரு கழகத்தின் துணையின்றி என்றுமே பாஜக வெற்றி பெறப்போவதில்லை. மத்தியில் பல மசோதாக்கள் நிறைவேற அங்கு வலிமையுடன் இருக்கும் திமுக மறைமுகமாகத் துணை நிற்க வேண்டும் அதனால் அவர்கள் என்ன ஊழல் செய்தாலும், குற்றங்கள் செய்தாலும் மத்திய அரசு கண்டு கொள்ளாது எனவே கட்சி மாறி வந்தவர் மாநிலத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தும், . அதை எல்லாம் விடுத்து, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல, திமுகவை எதிர்ப்பது போலப் பேச வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறார் அதனால் பேசுகிறார்.


புதிய வீடியோ