துரோகம் செய்தவர்களை வஞ்சித்து விட்டோம்: தி.மு.க.,வினர் மகிழ்ச்சி; காங்கிரசார் அதிர்ச்சி
சென்னை: கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற, ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க., தலைவருக்கு நன்றி கூட கூறவில்லை. அத்துடன், முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு அமைய ஆதரவு தெரிவித்ததுடன், அமைச்சரவையிலும் காங்., இடம் பெற்றது.காங்., கட்சியின் இந்த முடிவு, தி.மு.க.,வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன்பின் தமிழக காங்கிரஸ் தலைவர், அமைச்சர்கள் என, அனைவரும் தி.மு.க.,வை வசைபாடினர். டில்லியில் நடந்த, 'இண்டி' கூட்டணி கூட்டத்தில், தி.மு.க., பங்கேற்காத போது, காங்., அதை ஒரு பொருட்டாக கருதவும் இல்லை. அதன்பின் நடந்த கூட்டத்திற்கு, தி.மு.க.,வை அழைக்கவும் இல்லை.தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவை, தி.மு.க., ஆதரவோடு பா.ஜ., அரசு நிறைவேற்றி விடும் என்பது தெரிந்ததும், காங்., தலைவர்கள் தாங்கள் செய்த துரோகத்தை மறந்தனர். ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச முடிவு செய்தனர். முன்னதாக, மசோதாவுக்கு தி.மு.க., ஆதரவு தெரிவித்து, அக்கட்சி எம்.பி.,க்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆதரவு தெரிவித்த பிறகே, ஸ்டாலினை சந்திக்க முடிவு செய்தனர்.உடனடியாக தி.மு.க., - எம்.பி., கனிமொழி, காங்., தலைவர் கார்கேயை சந்தித்து, தாங்கள் நேரில் வந்தாலும், எங்கள் கட்சி முடிவில் மாற்றம் இருக்காது என்று கூறியும், அவர்கள் ஸ்டாலினை சந்திக்கும் திட்டத்தை கைவிடவில்லை. அவர்கள் சென்னை புறப்படுவதற்கு முன்பே, ஸ்டாலின் தன் முடிவில் மாற்றமில்லை என்பதை, சமூக வலைதளம் வழியே தெரிவித்தார். இவற்றை கண்டு கொள்ளாமல், காங்., தலைவர்கள் சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்தனர். ஆனால், அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.தி.மு.க.,வினர் தற்போது, 'துரோகம் செய்த காங்கிரசை வஞ்சம் தீர்த்து விட்டோம்' என, சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தி.மு.க., தலைமை தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள முடியாது என தெரிவித்த பின்னரும், 'இண்டி' கூட்டணி தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்தது, காங்., மற்றும் கூட்டணி கட்சியினரிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
த.வெ.க., அரசுக்கான ஆதரவு வாபஸ் 'ஆபர்' நிராகரிப்பு
தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: 'இண்டி' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நேற்று ஸ்டாலினை சந்தித்து பேசிய போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், 'தொகுதி மறுவரையறை மசோதாவை, ஆதரிக்கும் முடிவை, தி.மு.க., திரும்ப பெற வேண்டும். கடந்த, 23 ஆண்டுகளாக, காங்., - தி.மு.க., கூட்டணி, மத்தியிலும், மாநிலத்திலும் வெற்றி பெற்றுள்ளது.'தேசிய நலனுக்காக, த.வெ.க., கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து, அரசுக்கு தரும் ஆதரவை திரும்ப பெறவும் தயாராக இருக்கிறோம்' என்றார்.அதற்கு தி.மு.க.,வின் மூத்த எம்.பி., ஒருவர், 'அப்படியெல்லாம் ஆதரவை திரும்ப பெற வேண்டிய அவசியமில்லை. த.வெ.க., ஆட்சியை அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். தொகுதி மறு வரையறை மசோதாவில், காங்கிரசிடம் இருக்கும் திட்டத்தை சொல்லுங்கள். தமிழகத்திற்கு தொகுதிகள் குறையாது என்றால், அதை ஏற்கத் தயார். ஆனால், அப்படியொரு மாற்று திட்டம் இல்லாததால் தான், தமிழகத்தின் நலன் கருதி ஆதரிக்கிறோம்' என்றார்.ஸ்டாலினும் காங்., மூத்த தலைவரின் கருத்தை நிராகரித்து விட்டார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.