| ADDED : மார் 18, 2024 07:21 AM
திருமங்கலம் : கப்பலுாரில் ரெட்டியார்நலச்சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பேசியதாவது: ஒரு சமுதாயத்தில் மக்கள் தொகை இருக்கிற நிலையிலேயே தொடர வேண்டுமெனில் 10 தாய்மார்களுக்கு 21 குழந்தைகள் இருக்க வேண்டும். எந்த ஜாதி, மதம் பிள்ளை பெறுவதை சந்தோஷமாக ஏற்கிறதோ அந்த ஜாதி, மதம் ஜெயிக்கும். எண்ணிக்கையை வைத்து தான் தெருவில், ஊரில், அரசியலில், பார்லிமென்டில் மரியாதை. இந்தியாவில் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஹிந்து சமுதாயம் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பிரதமர் மோடி இரு தினங்கள் தமிழகப் பயணத்தை முடித்தபின், பா.ஜ., வேட்பாளர்கள் முழுப்பட்டியல் வெளியிடப்படும். பா.ஜ., கூட்டணி கட்சிகள் 39 தொகுதிகளிலும் பிரதமர் மோடியே வேட்பாளராக நிற்கிறார் என எண்ணி பணி மேற்கொள்வோம். தற்போது தி.மு.க., மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் தி.மு.க., உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரே நாளில் தேர்தல் நடத்துவது என்பதில்லை. சட்டசபைக்கும், லோக்சபாவுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவது. இது ஏற்கனவே இருந்த நடைமுறைதான். இந்நடைமுறை இடையில் மாறிவிட்டது.கப்பலுார் டோல்கேட் யாருடைய ஆட்சியில் வந்தது என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கேள்வி கேட்டதற்கு கனிமொழி, மாணிக்கம்தாகூர் இருவரும் வாயை மூடிக் கொண்டனர். டோல்கேட் நடைமுறையே வரும் காலத்தில் மாற உள்ளது. சென்சார் மூலம் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் துாரம் அளவுக்கு மட்டுமே கட்டணம் வசூல் செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் கப்பலுார் சுங்கச்சாவடி இருக்காது என்றார்.