சென்னை: “அரசின் நிதிநிலைக்கேற்ப தாலுகாக்களை பிரிப்பது தொடர்பான கோரிக்கையை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - சுதர்சனம்: மாதவரம் தாலுகா அலுவலகத்தில், சார்நிலை கருவூலம் இதுவரை இல்லை. தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. தாலுகா அலுவலக வளாகத்தில், சார்நிலை கருவூலம் இருந்தால் மக்களுக்கு வசதியாக இருக்கும்.அமைச்சர் தங்கம் தென்னரசு: வருவாய் துறையிடம் இடம்பெற்று, பொதுப்பணித் துறையிடம் மதிப்பீடு பெற்று, கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.சுதர்சனம்: பொன்னேரி தாலுகாவை இரண்டாக பிரிக்க வேண்டும். வருவாய் துறை அமைச்சரை கேட்டபோது, நிதி அமைச்சரிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்றார். இருவரும் இணைப்பிரியாத நண்பர்கள். அருகருகே அமர்ந்திருப்பவர்கள். இருவரும் ஐந்து நிமிடங்கள் செலவு செய்து, தாலுகாவை பிரித்து தர வேண்டும். இந்த தாலுகாவில், 8 லட்சம் மக்கள் உள்ளனர். அரசு திட்டங்கள் மக்களை சென்றடைவதில் சிரமமாக உள்ளது.அமைச்சர் தங்கம் தென்னரசு: பலரும் இதுபோல கோரிக்கை வைக்கின்றனர். வருவாய் துறையில் முன்மொழிவுகளை உருவாக்கி, அரசின் நிதிநிலையை கருத்தில் வைத்து, முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.அ.தி.மு.க., - செங்கோட்டையன்: பவானிசாகர் ஆற்றங்கரையில், புதிய சாய தொழிற்சாலை அமைக்க, அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.அமைச்சர் தங்கம் தென்னரசு: இந்த தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட கலெக்டர் அறிக்கை அடிப்படையில், கடந்த நவ., 26ல் அரசு அனுமதி வழங்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியம், விரிவாக்கத்திற்கு செல்லத்தக்க அனுமதியை, 2028 மார்ச் வரை வழங்கி உள்ளது. விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆலை இயங்க தினசரி 15.68 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. இதில், 15.23 லட்சம் லிட்டர் தண்ணீரை, சுத்திகரிக்கப்பட்ட சாய தொழிற்சாலை கழிவுநீரில் இருந்து எடுத்துக் கொள்ளவும், மீதி 45,000 லிட்டர் தண்ணீரை, பவானி ஆற்றில் இருந்து தினசரி எடுத்துக் கொள்ளவும் அனுமதி பெற்றுள்ளனர்.கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றவோ, விவசாயத்திற்கு உபயோகப்படுத்தவோ அனுமதி கிடையாது. கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு, கண்காணிப்பு கேமரா வழியே கண்காணிக்கப்படுகிறது. தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தடி நீர் மாதிரிகளை சேகரித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழியே கண்காணிக்கும்படி கூறியுள்ளோம். விவசாயிகள் கோரிக்கையை அரசு ஏற்று, ஆலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. விதிகளை மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.