சொந்த கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பால் பதவி இழந்த தி.மு.க., நகராட்சி தலைவி
திட்டக்குடி: தி.மு.க.,வைச் சேர்ந்த, திட்டக்குடி நகராட்சி தலைவியின் பதவி, நம்பிக்கையில்லா தீர்மானம் வாயிலாக பறிக்கப்பட்டது. கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி சேர்மனாக தி.மு.க.,வை சேர்ந்த வெண்ணிலா கோதண்டம் இருந்தார். இந்த நகராட்சியில், தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆதரவு கவுன்சிலர்கள் 19 பேர்; அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 5 பேர் என, மொத்தம் 24 பேர் உள்ளனர். இந்நிலையில், நகராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக, வெண்ணிலா மீது, கட்சி பாகுபாடின்றி கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான கணேசன் தலையிட்டு, தி.மு.க., கவுன்சிலர்களை சமாதானப்படுத்தி வந்தார். ஆனாலும், கடந்த செப்., 22ல், தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் 17 பேர், வெண்ணிலாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, நகராட்சி பொறியாளர் ராமரிடம் மனு அளித்தனர். மொத்தம் 14 குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவை, 17 பேரும் தனித்தனியாக கையெழுத்திட்டு கொடுத்தனர். இதையடுத்து, வெண்ணிலா கோதண்டம் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. அதில், தி.மு.க., 15; அ.தி.மு.க., 5; சுயேட்சை, 3; என 23 கவுன்சிலர்கள் வெண்ணிலாவுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால், அவர், சேர்மன் பதவியை இழந்ததாக, நகராட்சி ஆணையர் முரளிதரன் அறிவித்தார். தி.மு.க., நகர்மன்ற தலைவியின் பதவியை தி.மு.க., கவுன்சிலர்களே பறித்தது, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.