தி.மு.க., கூட்டணி கலகலத்து வருகிறது சேலத்தில் பழனிசாமி சந்தோஷ பகிர்வு
ஓமலுார்:அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்டம், எடப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி வடக்கு, தெற்கு ஒன்றியம், வனவாசி பேரூர் செயல் வீரர்கள் கூட்டம், வனவாசியில் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:தி.மு.க.,வில், ஸ்டாலின் குடும்பம் மட்டுமே உயர் பதவிக்கு வர முடியும். ஸ்டாலினுக்கு பின், 'நான் தான் முதல்வர்' என, யாராவது சொல்ல முடியுமா? சொன்னால் அக்கட்சியில் விட்டு வைப்பார்களா? குடும்ப கட்சி, வாரிசு அரசியல், மன்னர் பரம்பரை, ஆண் வாரிசுகள் மட்டுமே பதவியில் இருப்பார்கள்.நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், 'நான் கனவு காண்கிறேன்' என பேசியுள்ளார். 'அ.தி.மு.க., சரிந்து விட்டது' என, ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார்; அது பலிக்காது. நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில், சேலம் தொகுதியில் வெறும், 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அப்படியென்றால், தி.மு.க.,வுக்கு தான் சரிவு; அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்கு தான். நாமக்கல் விழாவில் முதல்வர், 'நாமக்கல்லுக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன' என்றார். அவை அனைத்தும், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகத்திலேயே நாமக்கல் மாவட்டத்துக்கு தான் அதிகளவில் நிதி ஒதுக்கி, பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சட்ட கல்லுாரி, நகராட்சி கட்டடம் கட்டப்பட்டு, நானே திறந்து வைத்தேன். தமிழகம் முழுதும் எங்கு சென்றாலும், அ.தி.மு.க., ஆட்சியில் என்ன திட்டம் நிறைவேற்றப்பட்டது என, என்னால் பேச முடியும்.ஒவ்வொரு முறையும் தேசிய கட்சிகளை ஆதரித்தோம்; அவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்துவிடுகின்றனர். அதேநேரம், கூட்டணியில் அங்கம் வைத்துள்ள கட்சிகளை அவர்கள் பொருட்படுத்துவதில்லை; நசுக்கப் பார்க்கின்றனர். அதனால் தான் தனித்து போட்டியிட்டோம். தி.மு.க., கூட்டணியில், தி.மு.க.,வை விமர்சித்து முதலில் வி.சி., திருமாவளவன் பேசினார். அடுத்து, கம்யூனிஸ்ட்கள் பேசுகின்றனர். அதனால், தி.மு.க., கூட்டணி கலகலத்து வருகிறது; அதுவே சந்தோஷமாக இருக்கிறது. 'சாம்சங்' நிறுவனத்தில் போராட்டம் நடக்கிறது; அதை, கம்யூ., கட்சியினர் நடத்துகின்றனர். ஆனால், சொத்து வரி உயர்த்தியபோது, அவர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டும்.தி.மு.க., ஆட்சியில் அறநிலையத்துறையை கூட விட்டுவைக்கவில்லை; அதையும் காலி செய்து விட்டனர். அந்த சாமி தான், 2026ல் கேட்கப் போகிறது. ஒரு அமைச்சர், 411 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, செய்தி வெளியாகியுள்ளது. 2026 தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சி அமைத்த பின், பல அமைச்சர்களின் ஊழல் வெளியாகும்.இவ்வாறு அவர் பேசினார்.