கருக்கலைப்பின் போது சிறுமி பலி டாக்டருக்கு மூன்று ஆண்டு சிறை
வாழப்பாடி : சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 17. திருமணமாகாத இவர், ஏழு மாத கர்ப்பமான நிலையில், 2023 ஏப்., 6ல், வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்புக்கு சென்றார். ஆனால், குறை பிரசவத்தில், பெண் குழந்தை பிறந்தது.பிறந்த சிசு இறந்து விட்டதாக கூறி, குப்பை தொட்டியில் மருத்துவர்கள் போட்டனர். அப்போது, சிறுமி ஐஸ்வர்யாவின் உடல் நிலை மோசமானதால், வேறு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர்.சேலம் அரசு மருத்துவமனைக்கு, சிறுமியை உறவினர்கள் துாக்கி சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.வாழப்பாடி போலீசார், தனியார் மருத்துவமனையில் விசாரித்தனர். அப்போது, குப்பை தொட்டியில் கிடந்த பெண் சிசு, மூச்சு திணறியபடி உயிருடன் இருந்தது.உடனடியாக அந்த சிசுவை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வாழப்பாடி அரசு மருத்துவமனை முன்னாள் முதன்மை மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி புகார்படி, வாழப்பாடி போலீசார் இந்த வினோத வழக்கை விசாரித்தனர்.உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும், சிறுமிக்கு சிகிச்சை அளித்தல்; மருத்துவ குறிப்புகளை முறையாக பின்பற்றாமல் இருந்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, டாக்டர் செல்வம்பாளை போலீசார் கைது செய்தனர்.வாழப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சன்மதி, இந்த வழக்கை விசாரித்து வந்தார். நேற்று தீர்ப்பு வழங்கினார்.சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு முயற்சி செய்து, சிறுமி இறந்த விவகாரத்தில், தனியார் மருத்துவமனை பெண் டாக்டர் செல்வம்பாளுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.