விதிமுறைகளை திணிக்காதீர்கள் மஞ்சுவிரட்டு வீரர்கள் வழக்கு
மதுரை:மஞ்சு விரட்டுக்குரிய நிபந்தனைகளை நீக்க தாக்கலான வழக்கில், தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம், தேவப்பட்டுவை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: ஜல்லிக்கட்டு வேறு, மஞ்சு விரட்டு வேறு. மஞ்சு விரட்டில் காளைகள் நான்குபுறமும் ஓடும். காளைகள், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. அதற்கு ஜல்லிக்கட்டிற்குரிய வாடிவாசல் அமைத்து விதிமுறைகளை திணித்து, பரிசுகள் வழங்குமாறு அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர்.தடுப்புகள் அமைக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள் அணிவதற்கு பனியன்கள் வழங்க வேண்டும். நுாறடிக்குள் காளைகளை அடக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கின்றனர். இதனால், மஞ்சுவிரட்டு நடத்த அதிக பணம் செலவாகிறது. அப்போட்டி நடத்துவது குறைந்து வருகிறது. மஞ்சுவிரட்டிற்குரிய நிபந்தனைகளை நீக்கி, பழைய பாரம்பரிய முறைப்படி நடத்த அனுமதிக்க வலியுறுத்தி, தமிழக கால்நடைத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு, கால்நடைத்துறை செயலர், சிவகங்கை கலெக்டர் எட்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.