சென்னை : ''அமலாக்கத்துறை, பிளாக் மெயில் ஏஜன்சி போல் செயல்படுகிறது,'' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.சென்னை அறிவாலயத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பிரதமர் மோடி ஆட்சியில் அமலாக்கத்துறை, பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. எப்படியாவது தி.மு.க., அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் அமலாக்கத்துறை செயல்பட்டு வந்தது. அமலாக்கத்துறை செயல்பாட்டிற்கும், பா.ஜ., விமர்சனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு பிறகாவது மத்திய அரசு, அமலாக்கத் துறையை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். 'பிளாக்மெயில் ஏஜன்சி' போல் அமலாக்கத் துறை செயல்படுகிறது. திண்டுக்கலில் அமலாக்கத் துறை அதிகாரிகள், லஞ்சம் கேட்ட செய்தியை பார்த்தோம். தற்போது, அமலாக்கத் துறை என்பது பிளாக்மெயில் அமைப்பு' போல் செயல்படுகிறது என்பதை உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டி, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், பல்கலைகளுக்கு துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கைகளுக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.