உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்காது :ஐகோர்ட்டில் அரசு தகவல்

உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்காது :ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை :'தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு, இப்போது தேர்தல் நடத்தப்படாது; வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பின்னரே நடத்தப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், விஸ்வந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவர் தாக்கல் செய்த மனு:விஸ்வந்தாங்கல் கிராம பஞ்சாயத்து தேர்தல், 2019 டிசம்பரில் நடந்தது. தேர்வான நிர்வாகிகள், 2020 ஜனவரியில் பொறுப்பேற்றனர். அவர்களின் பதவிக்காலம், 2025 ஜன., 5ல் முடிகிறது.

இட ஒதுக்கீடு பறிப்பு

கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, ஆதிதிராவிட மகளிருக்கு ஒதுக்கப்பட்டது. பஞ்சாயத்து ஒன்றிய வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு, மகளிர் மற்றும் பொது என்ற முறையில் ஒதுக்கப்பட்டது.அரசு கெஜட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிவிப்பின்படி, திருவண்ணாமலை மாநகராட்சியின் கீழ், திருவண்ணாமலை நகராட்சியும், 18 கிராம பஞ்சாயத்துகளும் வருகின்றன. இவை, மாநகராட்சியின் கீழ் சேர்க்கப்பட்ட பின், பதவிகள் மற்றும் இடங்களுக்கான இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு விட்டது; இடங்கள் ஒதுக்கீடு, வார்டுகள் மறுவரையறை பணிகளை மேற்கொள்ளவில்லை.மறுவரையறை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், விஸ்வந்தாங்கல் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் பஞ்சாயத்து ஒன்றிய வார்டு, மாவட்ட பஞ்சாயத்து வார்டு, ஆதிதிராவிடருக்காக வகைப்படுத்தப்பட்டிருக்கும். அதனால், மறுவரையறை மற்றும் இடங்கள் ஒதுக்கீட்டு பணிகளை முடிக்கும்படி, அரசுக்கும், பஞ்சாயத்து ராஜ் இயக்குனருக்கும் கடந்த செப்டம்பரில் மனு அளித்தேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.

எண்ணிக்கை குறையும்

பஞ்சாயத்துகளில், மக்கள் தொகைக்கு ஏற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடங்கள் ஒதுக்காமல், ஜனவரி முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு முயற்சிக்கிறது. திருவண்ணாமலை மாநகராட்சி உடன், பல கிராம பஞ்சாயத்துகளை இணைத்ததால், வார்டுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறையும்.எனவே, வார்டுகள் மறுவரையறை பணிகளையும், இடஒதுக்கீட்டையும் மேற்கொள்ளும் கடமை அரசுக்கு உள்ளது.வார்டுகள் மறுவரையறை பணிகளை முடிக்காமல், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட அனுமதித்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒதுக்கீடு உத்தரவாதம் என்பது கேலிக்கூத்தாகி விடும். எனவே, சட்ட நடைமுறையை பின்பற்றி, மாவட்டங்களில் வார்டுகள் மறுவரையறை பணிகளை முடிக்கவும், அதன்பின், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு இடஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட வேண்டும். அதன்பின், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

வெளியிடப்படாது

இம்மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.தனபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகினர். 'வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறைகளை பூர்த்தி செய்தபின், உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தான், நியாயமான தேர்தலை நடத்துவதாக இருக்கும். 'எனவே அதுகுறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாது' என, தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.

2025 இறுதியில் தேர்தல்?

அ.தி.மு.க., ஆட்சியில், புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள 1.19 லட்சம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு, 2019ல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின், மற்ற மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு, 2021ல் தேர்தல் நடத்தப்பட்டது.இந்நிலையில், 2019ல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், 2025 ஜன., 5ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், 2021ல் தேர்தல் நடத்தப்பட்ட மாவட்டங்களில், 2026 செப்., மாதம் பதவிக்காலம் முடிவடைகிறது.ஊரக உள்ளாட்சிகளுக்கு ஒருங்கிணைந்த தேர்தல் நடத்தப்படுமா அல்லது பதவிக்காலம் முடிவடைந்த 27 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில், மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்திருக்கிறது.ஊராட்சிகள், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட பின், 2025 இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajasekar Jayaraman
டிச 22, 2024 20:46

இப்போ தேர்தல் வச்சா வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் கூட்டனி கட்சிகள் மூலைக்கு ஒன்றாக சிதறிவிடும் என்ற பயம்.


ஆரூர் ரங்
டிச 22, 2024 14:21

கவுன்சிலர், தலைவர், உறுப்பினர் தேர்தல்ன்னு ஏதோ 1500 ஆவது கிடைக்கும் ன்னு ஆவலுடன் எதிர்பார்த்த டுமீல்கள் வருத்தம்.


Dharmavaan
டிச 22, 2024 10:30

திருடனிடத்தில் சாவி கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதே இது


Barakat Ali
டிச 22, 2024 12:10

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதும், ஒத்திப்போடுவதும், விரும்பிய போது நடத்தலாம் என்று மாநில அரசின் விருப்பத்தின் பேரில் இருக்கும் நிலை உள்ளாட்சி அமைப்புக்களுக்கும், அரசியல் சட்டத்துக்கும் அவமானம் .....


Barakat Ali
டிச 22, 2024 09:17

சட்டசபைத் தேர்தலுக்குள்ளாக நடத்தினால் முடிவுகளை அறிவிக்க வேண்டி வருமே??? அதன் மூலம் யாருக்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை என்கிற உண்மை தெரிய வருமே ???? அதுதான் காரணம் ...


Kasimani Baskaran
டிச 22, 2024 06:48

மற்றவர்களுக்கு ஓட்டுப்போட்டு விட்டால் என்னாவது என்ற பயத்தில் தேர்தல் நடத்த துணிவில்லை.


Suppan
டிச 22, 2024 15:32

ஒரே மாநிலம் ஒரே உள்ளாட்சி தேர்தல் ஹி ஹி நாங்க ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கிறோம்