சாம்பல் விற்பனையில் மின் வாரியத்திற்கு ரூ.241 கோடி வருவாய்
சென்னை:அனல்மின் நிலையங்களில் வெளிவரும் உலர் சாம்பலை விற்றதன் வாயிலாக, கடந்த ஆண்டில் மின் வாரியம், 241 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.திருவள்ளூர், சேலம், துாத்துக்குடி மாவட்டங்களில் மின்வாரியத்திற்கு, 4,320 மெகாவாட் திறனில், ஐந்து அனல்மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் மின் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. தினமும் சராசரியாக, 60,000 டன் நிலக்கரி பயன்படுத்தப்படுவதில் இருந்து, 30 - 40 சதவீதம் உலர் சாம்பல் வெளியேறுகிறது. மொத்த சாம்பலில், 20 சதவீதம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மீதம், சிமென்ட், கான்கிரீட் உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. சாம்பல் விற்பனையில், அரசியல்வாதிகளுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு அதிகம் வழங்கி, எடை குறைவாக பதிவு செய்வது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததால், மின் வாரியத்திற்கு வருவாய் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்ததை அடுத்து, உயரதிகாரிகளின் மேற்பார்வையில் சாம்பல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சாம்பல் விற்பனை வாயிலான வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, 2024 - 25ல், 241 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, 2023 - 24ல், 218 கோடி ரூபாய், 2022 - 23ல் 191 கோடி ரூபாய், 2021 - 22ல், 122 கோடி ரூபாய், 2020 - 21ல், 93 கோடி ரூபாயாக இருந்தது.