உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்று ஆண்டுகளில் 6,592 முறை ரயில் பாதையை கடந்த யானைகள்

மூன்று ஆண்டுகளில் 6,592 முறை ரயில் பாதையை கடந்த யானைகள்

சென்னை: 'கோவை மதுக்கரையில், கடந்த மூன்று ஆண்டுகளில், 6,592 முறை யானைகள் பாதுகாப்பாக, ரயில் பாதையை கடந்துள்ளன' என, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். கோவை, மதுக்கரை பகுதியில், அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு, அதிக எண்ணிக்கையில் யானைகள் வசிப்பதாக கூறப்படுகிறது. உணவு, தண்ணீர் போன்ற தேவைகளுக்காக யானைகள் செல்லும் போது, ரயிலில் அடிபட்டு இறப்பது, சில ஆண்டுகளுக்கு முன் அதிகரித்தது. கடந்த 2017 முதல் 2022 வரையிலான, ஐந்து ஆண்டுகளில், இங்கு 79 யானைகள் ரயிலில் அடிப்பட்டு இறந்தன. இது குறித்த தகவல் வெளியான நிலையில், யானைகள் இறப்பை தடுக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், வனத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில், யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் திட்டத்தை, வனத்துறை செயல்படுத்தியது; இதற்கு பலன் கிடைத்துள்ளது. நேற்று உலக யானைகள் தினத்தையொட்டி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட தகவல்: கோவை மதுக்கரை பகுதியில், யானைகள் நடமாட்டத்தை செயற்கை நுண்ணறிவு வாயிலாக கண்காணிக்கும் பணிகள், 2023ல் துவக்கப்பட்டன. இதற்காக, இப்பகுதியில், 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, 24 தெர்மல் கேமராக்கள் பொருத்தப்பட்டன. பிரத்யேக கட்டுப்பாடடு அறை அமைக்கப்பட்டு, யானைகள் நடமாட்டம், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. யானைகள் நடமாட்டம் குறித்து, ரயில் ஓட்டுநர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படுவதால், விபத்துகளின் எண்ணிக்கை பூஜ்யமாகி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், இங்கு 6,592 முறை யானைகள், பாதுகாப்பாக ரயில் பாதையை கடந்துள்ளன. இது யானைகள் பாதுகாப்புக்காக, வனத்துறை எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை