உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆக்கிரமிப்பால் ஊருக்குள் வெள்ளம் வரும் அபாயம்; மதுரை மாடக்குளம் மடைகளை பாதுகாக்கணும்!

ஆக்கிரமிப்பால் ஊருக்குள் வெள்ளம் வரும் அபாயம்; மதுரை மாடக்குளம் மடைகளை பாதுகாக்கணும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மாடக்குளம் கண்மாய் முழு கொள்ளளவும் நிரம்பி மறுகால் பாயும் நிலையில் மூன்று மடைகளும் ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் அவசர காலத்திற்கு தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளது.14 அடி ஆழத்தில் 3400 மீட்டர் நீளத்துடன் கூடிய மாடக்குளம் கண்மாய் 167 மில்லியன் கன அடி கொள்ளளவில் நிறைந்து காணப்படுகிறது. கண்மாய்க்கான நேரடி வாய்க்கால் மூலம் 500 ஏக்கர், கண்மாய் மூலம் 400 ஏக்கர் விவசாயம் தற்போதும் நடக்கிறது. கண்மாய்க்கு கொடிமங்கலம் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை மூலம் 12.5 கி.மீ., நீள கால்வாய் வழியாக தண்ணீர் வரத்து கிடைக்கிறது. மேலும் தென்கால், புதுக்குளம், வடிவேல்கரை, விளாச்சேரி கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாயும் போதும் நிலையூர் கால்வாயில் உள்ள 12 நேரடி மடைகள் வழியாகவும் உபரிநீர், பாசனத்தின் தேவைபோக மீதமுள்ள கழிவுநீர் மாடக்குளத்தில் சேருகிறது.

மடைகளே பிரதானம்

கண்மாயில் நீர் நிரம்பினால் மறுகால் வழியாக மட்டுமின்றி அவசரத் தேவைக்கு மடைகள் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்படும். இங்கே மூன்று மடைகள் வழியாக தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளது. முதல் மடையில் இருந்து பொன்மேனி வழியாக கிருதுமால் கால்வாயில் உபரிநீர் செல்லும் வழியில் ஆக்கிரமிப்பு உள்ளது. நடுமடையில் இருந்து துரைசாமி நகர் வழியாக கிருதுமாலில் கலக்கும் பகுதியில் மூன்று சர்வே எண்களில் பட்டா நிலத்தின் வழியாக கால்வாய் செல்வதால் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது. 3வது மடை பைபாஸ் ரோடு வழியாக கிருதுமாலில் சேர வேண்டும். இங்கும் கால்வாய் சுருக்கப்பட்டு முழுமையான ரோடாக மாற்றப்பட்டதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கண்மாயும், கரையும் பலப்படுத்தப்பட்டுள்ளதால் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் பயமில்லை என்றாலும் திடீரென பெருமழை பெய்தாலோ விநாடிக்கு 500 அடிக்கு மேல் நீர்வரத்து கிடைத்தாலோ கண்மாய் நீர் ஊருக்குள் பாய்வதற்கான அபாயம் உள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணமாக செல்லுார் கண்மாய்க்கான வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததை சொல்லலாம் என்கின்றனர் நீர்வளத்துறை அதிகாரிகள். அவர்கள் கூறியதாவது:முதல் மடையின் கடைசி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றினால் போதும். 2வது மடையில் பட்டா நிலத்து கால்வாயை மீட்டால் தண்ணீர் தடையின்றி செல்ல முடியும். 3வது மடைக்கான பை பாஸ் ரோட்டில் 'கட் அண்ட் கவர்' சேனல் அமைக்கலாம். தற்போது செல்லுார் கண்மாய்க்கான 'கட் அண்ட் கவர்' சேனல் குலமங்கலம் ரோட்டில் அமைக்கப்படுகிறது. ரோட்டின் அடியில் கான்கிரீட் சுவர் எழுப்பி தண்ணீர் செல்வதற்கும் மேலே கான்கிரீட் பாதை அமைத்து வாகனங்கள் செல்வதற்கும் வழி செய்தால் மாடக்குளம் கண்மாயும் அப்பகுதியும் நிரந்தரமாக பாதுகாக்கப்படும். ஏனென்றால் பாசனத்துக்கு மட்டுமின்றி எஸ்.எஸ்.காலனி முதல் எல்லீஸ்நகர் வரை ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கான நீராதாரமாக கண்மாய் உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venkatasubramanian
டிச 26, 2024 10:11

ஏங்க பாலம் கட்டி தண்ணீர் சென்றால் யாருக்கு பலன்? ஆக்ரமிப்பு அகற்றினோம் தூர் வாரினோம், அடைப்புகளை சரி செய்தோம் என்று கொள்ளை அடிப்பதை நிறுத்த முடியுமா? பட்டா நிலத்து கால்வாய்க்கு நஷ்ட ஈடு கொடுத்து விட்டு சரி செய்ய வேண்டியதுதானே


sundarsvpr
டிச 25, 2024 11:12

வருமுன் காப்போம் என்பது பொதுவாய் கடைபிடிப்பதில்லை. காரணம் வந்தபின் காப்போம் என்பது ஒரு லாபகிரமானது. சரிசெய்தல் என்ற நோக்கில் நிதி ஒதுக்கப்படும். இதில் முழுப்பணத்தையும் செலவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. முழுமையாய் செலவு என்று காட்டிவிட்டால் போதும். செலவு செய்யாத தொகை எங்கு போகும் என்பது மர்மம்.