சென்னை: ''கடந்த, 2006க்கு முன்பே நடைபெற்ற நில அபகரிப்புகளையும் விசாரித்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை: 'நில அபகரிப்பை விசாரிக்க, தனி போலீஸ் பிரிவு' என்ற தலைப்பில், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில், என் மீதும், தி.மு.க.,வினர் மீதும், என் குடும்பத்தினர் மீதும் சேறுவாரி இறைத்துள்ளார். தனி போலீஸ் பிரிவு, நில அபகரிப்பை விசாரித்து, நியாயமாக, சட்ட முறைகளின்படி நிறைவேற்றினால், பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். உண்மையான வழக்குகளில் சிக்குகின்றவர்கள் யாராயினும், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதை மனப்பூர்வமாக வரவேற்பவன் நான். இதற்கு என் ஆட்சிக்காலத்தில், என் கட்சிக்காரர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் சிறைவாசம் சென்று, பதவி, பட்டங்கள் இழந்ததற்கு சான்றுகள் உண்டு. ஆனால், நிலஅபகரிப்பை விசாரிக்கவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அமைக்கப்பட்டுள்ள தனி போலீஸ் பிரிவு, 2006-11 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற நில அபகரிப்பை மட்டும் விசாரிக்கும் என்பது வியப்பாக உள்ளது.அதற்கு முந்தைய அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நடந்த நில அபகரிப்பு வழக்கை எந்த தனி போலீஸ் பிரிவைக் கொண்டு விசாரிக்கப் போகிறார்? எனவே, 2006க்கு முந்தைய நில அபகரிப்புகளையும் விசாரித்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மா.கம்யூ., சார்பில் கடந்த மே 13, 2010ல் வெளியிட்ட பத்திரிகை செய்தியில், 'சிறுதாவூர் கிராமத்தில், மோசடியாக பட்டா செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு, ஏழைகளுக்கு வழங்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கின்றனர். கம்யூனிஸ்டுகளின் வேண்டுகோளின்படி நில அபகரிப்பைப் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி சிவசுப்ரமணியம் கமிஷன் அறிக்கையை ஜெயலலிதா படித்து பார்த்து, அதன்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவர் முறைப்படி விற்பனை செய்த இடம், தற்போது அதிக விலைக்கு போகும் என்பதால், தன்னை ஏமாற்றி, தன் நிலத்தை அபகரித்துக் கொண்டனர் என்று தனி போலீஸ் பிரிவை நாடலாம். இதில் எச்சரிக்கையாக இருந்து, உண்மையிலேயே நியாய விலை கொடுத்து வாங்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்கள் மீது வேண்டுமென்றே இப்பிரிவு பாயக்கூடாது. இல்லாவிட்டால், சிலர் மீது பழி போடுவதற்காக எடுக்கப்பட்ட முடிவாகத் தான் இது இருக்க முடியும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.