ராமதாசை தனிமையில் சந்தித்து 30 நிமிடங்கள் பேசிய இபிஎஸ்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாசுடன், இபிஎஸ் தனிமையில் 30 நிமிடங்கள் பேசியது உண்மை தான் என்று பாமக எம்எல்ஏ அருள் ராமதாஸ் கூறி உள்ளார்.இதய பிரச்னையால், சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில், ராமதாஸ், 86, அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது.இது தொடர்பாக, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 'பா.ம.க., தலைவர் ராமதாசை, இதய சிகிச்சை நிபுணர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். ஓரிரு நாட்களில், அவர் வீடு திரும்புவார்' என கூறப்பட்டுள்ளது.ராமதாஸ் மருத்துவமனையில் இருக்கும் விவரத்தை அறிந்த முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதேபோல், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ்சும் ராமதாசை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனும், மருத்துவமனைக்கு சென்று ராமதாசை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இவர்கள் 3 பேரின் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பாமக எம்எல்ஏ அருள் ராமதாஸ் தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அப்போது, 2026 சட்டசபை தேர்தலில் ராமதாஸ் யாருடன் கூட்டணி செல்ல போகிறார்? என்ற பேச்சு வார்த்தை நடந்திருக்கலாம் என்று சொல்லப்பட்டது. ராமதாசை, இபிஎஸ் தனியறையில் சந்தித்து, முக்கிய பேச்சு நடத்தியதாகவும், இது கூட்டணி பற்றியதாக தான் என்றும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக பல்வேறு ஹேஷ்யங்கள் சமூக வலை தளங்களில் எழுப்பப்பட்டன.இந் நிலையில், பாமக நிறுவனர் ராமதாசுடன், இபிஎஸ் தனிமையில் பேசியது உண்மை தான் என்று பாமக எம்எல்ஏ அருள் ராமதாஸ் கூறி உள்ளார். தமது முகநூல் பக்கத்தில் இந்த விவரத்தை பதிவிட்டு உள்ள அவர், ராமதாசுடன், இபிஎஸ் தனிமையில் 30 நிமிடங்கள் பேசியது உண்மைதான், என்னவென்று எனக்கு எப்படி தெரியும் என்று தெரிவித்துள்ளார்.இதையடுத்து, இந்த சந்திப்பு நிச்சயம் தேர்தல் கூட்டணிக்கானது தான் என்ற பேச்சுகளும் எழு ஆரம்பித்துள்ளன.