சென்னை : ''பீஹாரை ஜெயித்து விட்டோம்; அடுத்த 'டார்கெட்' தமிழகம் தான் என்று அமித் ஷா சொல்கிறார். அவர் மட்டுமல்ல; சங்கி படையையே கூட்டி வந்தாலும், தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலையில், தி.மு.க., இளைஞர் அணி, வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.ஆணவம்
அப்போது, அவர் கூறியதாவது: நம் கொள்கை எதிரிகள், துணை முதல்வர் உதயநிதியை, 'மோஸ்ட் டேஞ்சரஸ்' என்று புலம்புகின்றனர். அந்த அளவிற்கு, கொள்கையில் உதயநிதி உறுதியாக உள்ளார். மத்திய பா.ஜ., அரசு, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த ஆணவத்தில், வலதுசாரி மற்றும் பிற்போக்கு சக்திகள் ஆக்ரோஷத்துடன் செயல்படுகின்றன.பொய்கள், அவதுாறுகள், பிற்போக்கு எண்ணங்களை, தேன் தடவிய வார்த்தைகளால் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முயற்சிக்கின்றனர். அதை தடுக்க, மாற்று மருந்தான, நம் கருத்துக்களை பரப்ப வேண்டும். இப்போது நம் தோளில், தமிழகத்தையும், தமிழ் மொழியையும் காக்க வேண்டிய கடமை மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்தியாவையும், அதன் பன்முகத் தன்மையையும் காக்க வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பா.ஜ.,விற்கு எதிராக, கொள்கை ரீதியாக போராடும் மாநில கட்சி, தி.மு.க., மட்டும்தான்.அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது, தமிழகத்தை மட்டும்தான். அதனால் தான் அமித் ஷா போன்றவர்களுக்கு, நம் மீது எரிச்சல். 'பீஹாரை ஜெயித்து விட்டோம்; அடுத்த 'டார்கெட்' தமிழகம்தான்' என்று அவர் சொல்கிறார். அவர் மட்டுமல்ல; அவர் சங்கி படையையே கூட்டி வந்தாலும், அவரால் ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழகம். எங்களுடைய 'கேரக்டரையே' புரிந்து கொள்ள மாட்டேங்கிறீங்களே. அன்போடு வந்தால் அரவணைப்போம்; ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்.துரோகம்
தேர்தல் நெருங்கி விட்டது. 10 ஆண்டுகள், தமிழகத்தை படு பாதாளத்தில் தள்ளிய அ.தி.மு.க.,வினர், உத்தமர் போல் வேஷம் போட்டு வந்து ஓட்டு கேட்பர். தமிழகத்திற்கு துரோகம் செய்வதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ள பா.ஜ.,வினர், வழக்கம்போல் பொய் பிரசாரம் செய்வர். இன்னும் 50 ஆண்டுகள் முன்னோக்கி நடை போடப் போகிறோமா அல்லது பின்னோக்கி இழுக்க முயற்சி செய்பவர்களுக்கு அடிபணியப் போகிறோமா என்பதற்கு விடை அளிக்கும் தேர்தலாக இது இருக்கும். தி.மு.க.,வின் எதிர்காலத்தில்தான் தமிழகத்தின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இன்ஜின் இல்லாத கார்: உதயநிதி கிண்டல்
துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: ஒரு கோடி பேர் கூடினாலும், கட்டுப்பாடு இல்லை என்றால் யாருக்கும் பயன் இல்லை. நம்மிடம் இருக்கும் கொள்கை கூட்டம், கட்சிக்கு மட்டுல்ல; தமிழகத்திற்கும் பலம். குஜராத்தில் உட்கார்ந்து கொண்டு, எங்களை மிரட்ட நினைத்தால், அது நடக்காது. கடைசி உடன்பிறப்பு இருக்கும் வரை, சங்கி கூட்டம், தமிழகத்தை தொட்டு கூட பார்கக முடியாது. பா.ஜ., மதம் பிடித்து ஓடும் யானை என்றால், அதை அடக்கும் அங்குசம், முதல்வர் ஸ்டாலினிடம் உள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, தேர்தல் கமிஷன் என கூட்டணி அமைத்து, தமிழகத்தில் பா.ஜ., நுழைய பார்க்கிறது. காரில் பேட்டரி டவுன் ஆனால், தள்ளி விட்டு 'ஸ்டார்ட்' பண்ணலாம். இன்ஜின் பழுதானால், எவ்வளவு துாரம் தள்ளினாலும் 'ஸ்டார்ட்' ஆகாது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் காரில் இன்ஜின் இல்லை. பா.ஜ., என்ற லாரி, இன்ஜின் இல்லாத அ.தி.மு.க., காரை இழுத்து செல்ல பார்க்கிறது. பழனிசாமி, தமிழகத்தை காப்பாற்ற வேண்டும், நீதித்துறையை காப்பாற்ற வேண்டும் என்கிறார். முதலில் அவர் அ.தி.மு.க.,வை பா.ஜ., விடமிருந்து காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வெள்ளி சிம்மாசனம்
* மாநாட்டில் பங்கேற்க வந்த, அனைத்து நிர்வாகிகளுக்கும், 'தாயுமானவர் தளபதி ஆட்சியை மீண்டும் அமைப்போம்' என்ற தலைப்பில், அமைச்சர் எ.வ.வேலு எழுதிய புத்தகத்துடன் பரிசு பைகள் வழங்கப்பட்டன. அதில், மைசூர்பாக், மிக்சர் பாக்கெட், மசாலா பொரி பாக்கெட், கடலை மிட்டாய், பிஸ்கட், குடிநீர் பாட்டில், ஆரஞ்ச் ஜுஸ் பாக்கெட் போன்றவை இருந்தன * அமைச்சர் எ.வ.வேலு ஏற்பாட்டில், 1.50 லட்சம் பேருக்கு, 13 இடங்களில், மட்டன் பிரியாணி தயாரித்து, மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது. துணை முதல்வர் உதயநிதிக்கு வீரவாள், முதல்வருக்கு வெள்ளி சிம்மாசனத்தை, அமைச்சர் எ.வ.வேலு நினைவுப் பரிசாக வழங்கினார்.