உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீரியமில்லாத கொரோனா என்றாலும் அலட்சியம் கூடாது: அரசு டாக்டர்கள் அறிவுரை

வீரியமில்லாத கொரோனா என்றாலும் அலட்சியம் கூடாது: அரசு டாக்டர்கள் அறிவுரை

சென்னை:'வீரியம் இல்லாத கொரோனாவாக இருந்தாலும், பரவும் வேகம் அதிகம் என்பதால், மருத்துவமனை, சந்தை உள்ளிட்ட கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், முகக்கவசம் அணிவது அவசியம்' என, அரசு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. 'ஒமைக்ரான்' வகை வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கொரோனாவாக இருப்பதால், வீரியம் இல்லாமல் இருப்பதாக, அரசு தெரிவிக்கிறது. அதேநேரம், இணை நோயாளிகள் மற்றும் முதியோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், தினமும் கொரோனாவால், 30 பேர் வரை பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமூக ரீதியான கொரோனா பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையை துவங்கினால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பிந்தைய பாதிப்புகள்

தற்போது, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 215 பேர் வரை சிகிச்சையில் இருக்கும் நிலையில், அவற்றில், 100க்கும் மேற்பட்டோர் சென்னையில் வசிப்பவர்களாக இருப்பதாக, மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில், வீரியம் இல்லாத கொரோனா என்றாலும், வைரஸ் மீதான பிந்தைய பாதிப்புகள் இருப்பதால், எச்சரிக்கை அவசியம் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, அரசு டாக்டர்கள் கூறியதாவது:கொரோனா பரவல் இருந்தாலும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கக்கூடாது. தனியாக வார்டுகள் உருவாக்க கூடாது என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரவி வரும் கொரோனா வீரியம் இல்லாமல் இருந்தாலும், இணை நோயாளிகள், முதியோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போது, சில நேரங்களில் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

உடல் நல பிரச்னை

மேலும், கொரோனா பாதித்து மீண்டவர்கள், பின்னாளில் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பலவிதமான உடல்நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, வீரியம் குறைந்தது என்று, யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம்.மருத்துவமனை, சந்தை பகுதிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லும் போது, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகழுவுதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !