உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்பார்த்த பெயர் மத்திய அரசு பட்டியலில் மிஸ்ஸிங்: புதிய டி.ஜி.பி., நியமனத்தில் இழுபறி நீடிப்பு

எதிர்பார்த்த பெயர் மத்திய அரசு பட்டியலில் மிஸ்ஸிங்: புதிய டி.ஜி.பி., நியமனத்தில் இழுபறி நீடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்திற்கு புதிய டி.ஜி.பி.,யை நியமிக்க, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., அனுப்பிய பட்டியலில், மாநில அரசு எதிர்பார்த்த அதிகாரியின் பெயர் இடம் பெறவில்லை. அதனால், அப்பட்டியலை ஏற்க தமிழக அரசு மறுத்துள்ளதால், புதிய டி.ஜி.பி., நியமனத்தில் இழுபறி நீடிக்கிறது. இது குறித்து, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலர் கூறியதாவது: புதிய டி.ஜி.பி.,யை நியமிப்பதற்காக, தமிழக அரசு சார்பில், மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பப்பட்டது. அதில், டி.ஜி.பி., மற்றும் கூடுதல் டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளான சீமா அகர்வால், ராஜிவ் குமார், சந்தீப் ராய் ரத்தோட், வன்னிய பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கடராமன், வினீத் தேவ் வாங்கடே, சஞ்சய் மாத்துார், டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பாலநாகதேவி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

அரசு எதிர்ப்பு

இந்த பட்டியல், கடந்த செப்டம்பர் 1ம் தேதி யு.பி.எஸ்.சி., அலுவலகம் சென்றடைந்தது. ஆனால், பட்டியலில் இடம் பெற்றிருந்த வன்னிய பெருமாள் மீது துறை ரீதியான விசாரணை இருப்பதாகக் கூறி, அவரின் பெயரை தமிழக அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், டில்லியில் யு.பி.எஸ்.சி., அலுவலகத்தில் செப்., 26ல் நடந்தது. தேர்வு பட்டியலில் தற் போது பொறுப்பு டி.ஜி.பி., யாக உள்ள வெங்கட ராமனின் பெயர் இருந்ததால், கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. தமிழக அரசு சார்பில், தலைமை செயலர், உள்துறை செயலர் பங்கேற்றனர். கூட்டத்தில், பட்டியலில் முதலிடத்தில் இருந்த சீமா அகர்வால், குறைந்த ஆண்டுகளே சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்துள்ளார். சந்தீப் ராய் ரத்தோட், கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் திறம்பட பணியாற்றவில்லை. மகேஷ்குமார் அகர்வால் மத்திய அரசு பணிக்கு சென்று விட்டார் என கூறி, அவர்களின் பெயரை தேர்வு செய்ய, தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. புதிய டி.ஜி.பி.,க்கான தேர்வு பட்டியலில், டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பாலநாகதேவி ஆகியோரில் ஒருவரின் பெயரை இறுதி செய்து தரும்படியும் கேட்கப்பட்டு உள்ளது. டேவிட்சன் தேவாசீர்வாதம் தற்போது சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக உள்ளார். சீமா அகர்வால் சந்தீப் மிட்டல், மாநில சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாகவும்; பாலநாகதேவி, பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாகவும் உள்ளனர். இவர்களுக்கு வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் கோரிக்கை காரணமாக, யு.பி.எஸ்.சி., கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. ஆனால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, சீமா அகர்வால், ராஜிவ் குமார், சந்தீப் ராய் ரத்தோட் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, யு.பி.எஸ்.சி., பரிந்துரை செய்து தமிழக அரசுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே அனுப்பி விட்டது. அதில், தமிழக அரசு எதிர்பார்த்த நபரின் பெயர் இடம் பெறவில்லை. அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு பொது தேர்தல் நடக்க உள்ள நிலையில், தாங்கள் எதிர்பார்த்த நபர் பெயர், மத்திய அரசு பரிந்துரை பட்டியலில் இடம் பெறாததால், அதை ஏற்க தமிழக அரசு மறுத்து விட்டது. இதனால், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sadananthan Ck
அக் 24, 2025 08:19

மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் போட்டு அதை கவர்னருக்கு அனுப்பி வையுங்கள் அதை அவர் கிடப்பில் போடுவார் உடனே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுங்கல் அதற்குல் தேர்தல் வந்து விடும் அது வரை நீங்கள் நியமித்த பொறுப்பு டிஜிபியே பணியில் இருப்பார் நீங்கள் நினைத்தபடி எல்லா வேலையை கச்சிதமாக முடித்து விடலாம்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 24, 2025 07:52

திருபுவனம் புகழ் திண்டுக்கல் நிகிதாவுக்கு மிகவும் வேண்டியவராகவும், அறிவாலய அடையாள அட்டை வைத்திருப்பவராகவும் இருப்பவருக்கு மட்டுமே ஆசீர்வாதம் வழங்கப்படுமாம்.


ramani
அக் 24, 2025 06:15

ஊராட்சி ஒன்றிய அரசு போகாத ஊருக்கு வழி தேடுகிறது. ஊராட்சி ஒன்றிய அரசுக்கு போதாத காலம்.


Kasimani Baskaran
அக் 24, 2025 04:01

டிஜிபியை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை, ஐபிஎஸ் கூட தேவையில்லை, திராவிட அறிமுகப்பயிற்சி எடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியிருந்தால் போதுமானது என்று மசோதா போட்டு கவர்னருக்கு அனுப்பின்னால் போதும்...


புதிய வீடியோ