போலி என்.சி.சி., முகாம் வழக்கு முடித்துவைப்பு
சென்னை:கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி., முகாம் நடத்தி, மாணவியரை பாலியல் தொந்தரவு செய்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போலி என்.சி.சி., முகாம் நடத்தி, மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சூரியபிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அடங்கியஅமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. நான்கு பள்ளிகளில், போலி என்.சி.சி., முகாம் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வேறு பள்ளிகளிலும் முகாம் நடத்தப்பட்டு உள்ளதா என விசாரிக்கப்படுவதாகவும், முக்கிய நபரான சிவராமன் மரணம் தொடர்பான வழக்கில், மாஜிஸ்திரேட்டின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, ஒரு பள்ளியில் மட்டுமே, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக கூறிய நீதிபதிகள், மற்ற மூன்று பள்ளிகளிலும் விசாரணை நடத்தி, மாணவியரின் மனநலத்தை அறிந்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டனர். சிவராமன் மரணம்குறித்த விசாரணை அறிக்கையை, விரைந்து தாக்கல் செய்யும்படி, சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டனர்.இந்நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநிலத்தை சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில், சிறப்பு விசாரணைக்குழு அமைக்கும்படி, மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அதை, நீதிபதிகள் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து, ஏற்கனவே இரண்டு பள்ளிகளுக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டு விட்டதால், மீதி உள்ள இரு பள்ளிகளுக்கும், ஒரு வாரத்தில் தனி அதிகாரிகளை நியமிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை தொடர்பான அறிக்கையை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, உயர் நீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்யும்படி, அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.