இணை பொருட்கள் வாங்கினால் மட்டுமே யூரியா தருவோம் உர வியாபாரிகள் நிபந்தனையால் விவசாயிகள் கடும் அவதி
சென்னை: இணை பொருட்களுடன் உரங்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க, வேளாண் துறையினர் புதிய நிபந்தனை விதித்துள்ளனர். தமிழகம் முழுதும், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் போதிய அளவில் நீர் இருப்பு உள்ளது. பல அணைகளில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி, நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறு தானியங்கள், கரும்பு, பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பருவத்தில் இதுவரை, 10 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பு எட்டப்பட்டுள்ளது. இது, 30 லட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய யூரியாவில் பாக்கி வைத்துள்ளது. அதனால், யூரியாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பயிர்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், யூரியா தேவை இரு மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள யூரியாவை வைத்து, நிலைமையை சமாளித்து விடலாம் என, வேளாண் துறையினர் வியூகம் வகுத்துள்ளனர். ஆனால், யூரியா வாங்க, தனியார் கடைகளுக்கு செல்லும் விவசாயிகளிடம், மூட்டைக்கு 500 முதல் 700 ரூபாய் வரை பூச்சிக்கொல்லி, பயிர் ஊக்கி உள்ளிட்ட இணை பொருட்களை வாங்க வேண்டும் என, வியாபாரிகள் நிர்ப்பந்தம் செய்கின்றனர். ஆலோசனை கூட்டம் தொடர்புடைய உர தயாரிப்பு நிறுவனங்கள் தான், இணை பொருட் களை வாங்கினால் மட்டுமே யூரியா வழங்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளதாக, விவசாயிகளிடம் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால், யூரியாவை தேவைக்காக, வேறு வழியின்றி இணை பொருட்களுடன் விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். அவ்வாறு வாங்காவிட்டால், கூடுதலாக 250 ரூபாய் கொடுத்து, யூரியாவை வாங்கும்படி சொல்கின்றனர். இதனால், சாகுபடி செலவு அதிகரிக்கிறது. உர விற்பனை தொடர்பாக, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இக்கூட்டத்தின் வாயிலாக, முறைகேடில் ஈடுபடும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் கூறி வருகின்றனர். ஆனால், மாவட்ட அளவில் அமைச்சர் மற்றும் செயலர் உத்தரவை செயல்படுத்த, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்ற புகார் உள்ளது. இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபடும் உரக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க, வேளாண் துறையினர் புதிய நிபந்தனை விதித்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சமூக வலைதள குழு திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிகளவில் நடக்கிறது; யூரியா தேவையும் அதிகரித்துள்ளது. தட்டுப்பாடு காரணமாக , சில கடைகளில் கூடுதல் விலையில் உரங்கள் விற்கப்படுகின்றன. மேலும், 1,000 ரூபாய்க்கு , யூரியா தயாரிப்பு நிறுவனத் தின் இணை தயாரிப்பு பொருட்களை வாங்க வேண்டும் என்று உரக்கடை வியாபாரிகள் கட்டாயப் படுத்துகின்றனர். இது தொடர்பாக, வேளாண் துறை அதிகாரிகள் இடம் பெற்றிருக்கும் சமூக வலைதள குழுக்களில் வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர். அதற்கு பதில் அளிக்கும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடையின் பெயரை குறிப்பிட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர். அதிகாரிகளுக்கு ரகசியமாக மொபைல் போனில் புகார் அளித்தாலே, உரக்கடை உரிமையாளர்கள் தொடர்புடைய விவசாயியை அழைத்து மிரட்டுகின்றனர். அப்படி இருக்கும் போது, நேரடியாக எப்படி புகார் தெரிவிக்க முடியும்? தட்டிக் கழிப்பதற்காக அதிகாரிகள் இவ்வாறு செய்கின்றனர். மேலும், வெள்ளிக் கிழமை அளித்த புகாருக்கு, திங்கள் கிழமை அலுவலக நாளில் தான் கடைக்கு சென்று ஆய்வு நடத்த முடியும் என்றும் கூறுகின்றனர். அமைச்சர், அதிகாரிகள் ஒப்புக்கு உத்தரவிடுவதே இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.