| ADDED : டிச 27, 2025 07:17 AM
மதுரை: தமிழக அரசு 2025--26 நிதியாண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விவசாய பயன்பாட்டுக்கான புதிய இணைப்பு பெற அரசாணை பிறப்பித்தது. தட்கல் முறையில் 5 எச்.பி., முதல் 15 எச்.பி., வரை மின் இணைப்பு பெற, ரூ.2.50 லட்சம் முதல், ரூ.4 லட்சம் வரை தட்கல் கட்டணம் செலுத்த வேண்டும்.ஏற்கனவே சாதாரண பிரிவில் பதிவு செய்துள்ளோரும் தட்கல் பிரிவுக்கு மாறிக் கொள்ளலாம். இதற்காக ஆன் லைனில் விண்ணப்பிக்கும் போது, தொழில் நுட்ப சவால்களால் விண்ணப்பிக்க இயலவில்லை என விவசாயிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டன. எனவே விண்ணப்ப கால அவகாசம் டிச.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பத்தாயிரம் இணைப்புகள் இலக்கு தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு 'தட்கல்' முறையில் 10 ஆயிரம் புதிய இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2013 முதல்அரசு சிறப்பு திட்டங்கள்,தோட்டக்கலைத் துறை மூலம்,சுயநிதி உதவித் திட்டங்களில் விண்ணப்பித்தோர் என காத்திருப்போர்பட்டியல் நீளமாக உள்ளது. இதனால் புதிதாக விண்ணப்பிப்போருக்கு இணைப்பு கிடைக்குமா என்பது புதிராகவே உள்ளது. மின் இணைப்பு வழங்குவதற்கான திட்ட மதிப்பீடு, கெப்பாசிட்டருடன் கூடிய மோட்டார் பம்ப் செட் தயார் நிலையில் இருப்பதை ஆய்வு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு புதிய வரையறை வழங்கியுள்ள நிலையில், எப்போது மின் இணைப்பு கிடைக்கும் என்ற கேள்விக்கு மவுனமே மின் வாரியத்தின் பதிலாக இருக்கிறது. தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில கவுரவத் தலைவர் ராமன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பல ஆயிரம் விவசாயிகள் 2013 முதல் விண்ணப்பித்தும் மின் இணைப்பு கிடைக்காமல் காத்திருக்கின்றனர். இதுபற்றி மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் முறையான தகவல் தர மறுக்கின்றனர். உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் மின் இணைப்பு இல்லாத வெற்றுக்கம்பங்கள் கணிசமாக உள்ளன. தட்கல் முறையில் விண்ணப்பிக்க லட்சக்கணக்கில் கடன் வாங்கும் விவசாயிக்கு உடனே இணைப்பு கிடைக்காததால், வட்டிக்கு மேல் வட்டி எகிறுகிறது.மின்கம்பங்கள், மின் ஒயர்கள் போன்றவற்றுக்கான தொகை பற்றிய வழிகாட்டலும்முழுமையாக இல்லாததால் கூடுதலாக ரூ.ஒரு லட்சத்திற்கும் மேலாக செலவிட வேண்டியுள்ளதுஎன்றார்.