மரபணு மாற்ற விதை நெல் வேண்டாம்: விவசாயிகள்
சென்னை:அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுகுறித்து, கூட்டமைப்பின் மாநில தலைவர் வேட்டவலம் மணிகண்டன் கூறியதாவது:தவறான பிரசாரத்தால், தர்ப்பூசணி பயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும். மத்திய அரசு, சமீபத்தில் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்தது. சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில், இந்த விலை அறிவிப்பு, கரும்பு விவசாயத்தை எந்த வகையிலும் மீட்டெடுக்காது. எனவே, உரிய விலையை விரைந்து நிர்ணயம் செய்ய வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட, எந்த விதைகளையும் இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது. விதை நெல்லையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதை நெல்லை பயன்படுத்த மாட்டோம் என்பதில், தமிழக விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் கிரி, செயலர் வாரணவாசி ராஜேந்திரன், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முற்றுகை போராட்டம்
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்து, தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறியதாவது:மத்திய அரசின் விவசாய கடன் அட்டை வாயிலாக, 3 லட்சம் ரூபாய் வரை நகை கடன் வழங்கப்பட்டது. இதற்கு ஏழு சதவீத வட்டி வசூல் செய்யப்பட்டது. ஒரு ஆண்டிற்குள் பணத்தை கட்டினால், நான்கு சதவீதம் மட்டுமே வசூல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விதிமுறையை மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி மாற்றி விட்டது. 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் தரக்கூடாது என, வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மீண்டும் பழையபடி கடன் வசூலிப்பு நடைமுறையை தொடர வேண்டும் என, மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகம், சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பினோம். அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடத்தினோம். இதுகுறித்து அழைத்து பேசிய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.