உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டாட்சி என்றாலே மத்திய அரசுக்கு அலர்ஜி * மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின் காட்டம்

கூட்டாட்சி என்றாலே மத்திய அரசுக்கு அலர்ஜி * மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின் காட்டம்

மதுரை:''கூட்டாட்சி என்றாலே, மத்திய அரசுக்கு அலர்ஜியாக உள்ளது,'' என, மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.அவர் பேசியதாவது: திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடைமை இயக்கத்திற்கும் இருப்பது கருத்தியல் நட்பு. அதன் அடையாளமாகவே, நான் இம்மாநாட்டுக்கு வந்துள்ளேன். இந்த இரு இயக்கங்களுக்குமான உறவு என்பது, கம்யூ., கட்சியின் அறிக்கையை ஈ.வெ.ரா., தமிழில் மொழி பெயர்த்தது முதலே துவங்கியது. தன்னை ஒரு கம்யூனிஸ்டாகவே அடையாளப்படுத்தி கொண்டவர் கருணநிதி. உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் உருவச்சிலை சென்னையில் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்துவிட்டு மாநாட்டுக்கு வந்துள்ள என்பெயர் ஸ்டாலின். இந்த கொள்கை உறவோடு, எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியத்திற்காகவே நாம் தேர்தல் கூட்டணி அமைக்கிறோம். மாற்றத்தை நோக்கிய நமது பாதையும், பயணமும் மிக நீண்டது. உடனே நிகழ, மாற்றம் என்பது மேஜிக் அல்ல. அது, பிராசஸ். இப்பயணத்தில், 2019 முதல் நாம் இணைபிரியாமல் இருக்கிறோம். ஏனெனில் நமது இலக்கு என்ன. நாம் யாரை, எதற்காக எதிர்க்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு இயங்குகிறோம். தமிழகத்தில் உள்ள இக்கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்ற நப்பாசையோடு சிலர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எண்ணம் நிச்சயம் ஈடேறாது. கூட்டாட்சி என்ற சொல்லே, இன்று மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜியாக உள்ளது. மாநில உரிமைக்காக பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. மத்திய அரசின் எதேச்சதிகார தன்மையால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும் தான். எனவே, நாங்கள் இங்கு பேசுவதை வாக்குமூலமாகவே எடுத்துக் கொள்ளலாம். நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் முதல் வரியிலேயே, பல்வேறு மாநிலங்களால் ஆன ஒன்றியமே இந்தியா என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் தான், நான் ஒன்றியம் என்கிறேன். சட்டத்தில் இல்லாததை நான் சொல்லவில்லை. அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடு தான் அவர்களின் கோபம்.தி.மு.க.,வைப் பொறுத்தவரை மாநில சுயாட்சி என்பது எங்கள் உயிர் கொள்கை. 1970ல் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என முப்பெரும் விழாவில் ஐம்பெரும் கொள்கையில் ஒன்றாக கருணாநிதி உருவாக்கிக் கொடுத்தார். மாநில சுயாட்சிக்காக, இந்திய அளவில் கூட்டாட்சிக்காக நாம் தொடர்ந்து போராடுகிறோம். ஆனால், இதற்கு எதிராக மத்திய அரசு உள்ளது. மாநில அரசுகள் டில்லிக்கு காவடி துாக்குவதை மாற்றி, அதிகார பகிர்வுக்கு வழிகாட்டுவது தான் தனது அணுகுமுறையாக இருக்கும் என்று கூறிய, பிரதமர் மோடியின் ஆட்சி தான் மாநிலங்களை அழிக்கும் ஆட்சியாக, மாநில மொழிகளை சிதைக்கும் ஆட்சியாக, பல்வேறு தேசிய இனமக்களை ஒழிக்கும் ஆட்சியாக, பல்வேறு பண்பாடுகளை கொண்ட மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் ஆட்சியாக, அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை, 'டம்மி'யாக மாற்றி, ஒற்றை ஆட்சி தன்மை கொண்ட பாசிச ஆட்சியாக நடக்கிறது.மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான், இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும். அதற்கு உங்களோடு போராட நாங்கள் காத்திருக்கிறோம். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில், தொகுதி மறுசீரமைப்பை கர்நாடகா, கேரளா, தமிழகம் போன்ற தென்மாநிலங்கள் எதிர்க்கிறோம். ஏற்கனவே உள்ள இந்த நிலையே மேலும், 25 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்கிறோம். அதற்கு, பிரதமர் மோடி இன்னும் பதிலளிக்கவில்லை.மாநில கூட்டாட்சி, சமூகநீதி போன்ற மக்கள் நலனுக்கு எதிராகவே மத்திய அரசு செயல்படுகிறது. அதற்கு எதிராக இணைந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநில அரசுகள் மத்திய அரசின் விளம்பரதாரர்கள் அல்ல:

தற்போது கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பது குறித்து பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசின் விளம்பரதாரர்கள் போல் செயல்பட இயலாது. அவ்வாறு செயல்பட்டால், அது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஜி.எஸ்.டி.,யை பொறுத்தவரை மாநிலங்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படுவதில்லை.மத்திய அரசு பொது விதிகளை உருவாக்கினாலும், அதை சுமப்பது மாநில அரசுகளாகதான் உள்ளது. கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைகள் அதிகரிக்கின்றன. பெரும்பாலான விஷயங்களுக்கு மாநில அரசுகள் நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளது. ஒரே நாடு; ஒரே தேர்தல் எனும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு சட்ட மசோதாக்களையும் நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் ஜனநாயகம், கூட்டாட்சியை பாதுகாக்க முன்னெடுப்பது அவசியம்.பினராயி விஜயன், கேரள முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Narasimhan
ஏப் 08, 2025 14:37

ஒரு சிறிய திருத்தும். கூட்டாட்சி இல்லை. குடும்ப ஆட்சி


R Barathan
ஏப் 04, 2025 22:11

மாநிலத்தில் சுயாட்சி முறையில் தனியாக கொள்ளை அடிப்பது... மத்தியில் கூட்டாட்சி கொண்டு அங்கும் கொள்ளை அடிக்க ஆசை. ஏன் இவர் மாநிலத்தில் கூட்டாட்சி தர மறுக்கிறார்கள். ஆட்சியில் பங்கு என்றாலே அந்த கட்சியை மிரட்டி ஒடுக்கி விடுகிறார்கள் அல்லது அந்த கட்சியை தாமாகவே கூட்டணியில் இருந்து விலக வைக்கிறார்கள். திமுக தலைவருக்குதான் கூட்டாட்சி/கூட்டணி ஆட்சி என்றால் அலர்ஜி. இன்று வரை திமுக கூட்டணி கட்சிகள் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு தர மனமில்லை. இதுதான் நிதர்சனமான உண்மை.


Dharmavaan
ஏப் 04, 2025 21:24

கூட்டாட்சி என்பதே பிரிவினைவாதம்


Dharmavaan
ஏப் 04, 2025 21:22

இவர் மாவட்ட சுயாட்சி கொடுக்க தயாரா? இதன் முடிவு என்ன ?பஞ்சாயத்து வரை சுயாட்சி கொடுக்கட்டும் இவaf. அப்போது தெரியும் யார் சர்வாதிகாரி என்று


Dharmavaan
ஏப் 04, 2025 21:19

இந்தி கூட்டணி கட்சி என்றாலே கூட்டணி என்றால் பாலில் விஷம் கலப்பது போல் நாட்டுக்கு கேடு


Nagarajan S
ஏப் 04, 2025 20:41

கூட்டாட்சி என்றால் மத்திய அரசுக்கு அலர்ஜி என்று கூறும் இவர், பல கட்சிகளின் கூட்டணியுடன் வெற்றி பெற்று, ஏன் திமுக எம் எல் ஏ க்களுக்கு மட்டும் மந்திரி பதவி கொடுத்தார்? ஏன் கூட்டணி கட்சிகளின் எம் எல் ஏ க்களுக்கும் மந்திரி பதவி கொடுத்து கூட்டாட்சி தத்துவத்தை செயல்படுத்தாமல் விட்டார். ஊருக்கு தான் உபதேசம்.


முக்கிய வீடியோ