தாமதம் செய்து நெரிசலை ஏற்படுத்திய த.வெ.க.,; முதல் தகவல் அறிக்கையில் புகார்
சென்னை: த.வெ.க., பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரிடம் போலீசார் எச்சரிக்கை செய்தும், வேண்டுமென்றே திட்டமிட்டு காலதாமதம் செய்து, கூட்ட நெரிசலை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு காரணமாகி விட்டதாக, கரூர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலர் நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலர் மதியழகன் ஆகியோர் மீது, கரூர் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை: த.வெ.க., கரூர் மேற்கு மாவட்டச் செயலர் மதியழகன், அவரது கட்சியின் தலைவர் விஜய், கரூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். இது குறித்து ஆலோசித்து, 11 நிபந்தனைகளுடன், கரூர் வேலுசாமிபுரத்தில் அனுமதி வழங்கப்பட்டது. 500 போலீசார்
அதன்படி, செப்., 27ம் தேதி, மத்திய மண்டல ஐ.ஜி., மற்றும் கரூர் மாவட்ட எஸ்.பி., மேற்பார்வையில், கூடுதல் எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் என, 500 பேர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணிக்கு நியமிக்கப் பட்டனர். கரூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் என, பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், காலை 9:00 மணியளவில் பல தொலைக்காட்சிகளில், விஜய் பகல் 12:00 மணிக்கு கரூர் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால், 27ம் தேதி காலை 10:00 மணியில் இருந்தே, பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் வர துவங்கினர். இதனால், கரூர் வேலுசாமிபுரம் மெயின் ரோடு, கோவை சாலை, முனியப்பன் கோவில் ஜங்ஷன், திருக்காம்புலியூர் ரவுண்டானா, மதுரை - சேலம் பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கரூர் மேற்கு மாவட்டச் செயலர் மதியழகன் கொடுத்த விண்ணப்பத்தில், 10,000 தொண்டர்கள் தான் வருவர் என எழுதிக் கொடுத்தார். ஆனால், பிரசாரக் கூட்டத்திற்கு, 25,000க்கும் மேற்பட்டோர் வந்தனர். மாலை 4:45 மணிக்கு, த.வெ.க., தலைவர் விஜய், கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம் வழியாக நுழைந்து, வேண்டுமென்றே காலதாமதம் செய்து, அனுமதி இல்லாமல் பல இடங்களில், 'ரோடு ஷோ' நடத்தி, பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தினார். அதிக இடங்களில் நிபந்தனைகளை மீறி வரவேற்பு அளித்து காலதாமதம் செய்து, மாலை 6:00 மணிக்கு முனியப்பன் கோவில் ஜங்ஷனில், ராங் ரூட்டில், அதாவது சாலையின் வலதுபுறம் விஜய் சென்ற வாகனத்தை செலுத்த வைத்துள்ளனர். அவரின் வாகனத்தை, இரவு 7:00 மணிக்கு வேலுசாமிபுரம் ஜங்ஷனில், தொண்டர்கள் கூட்டத்திற்கு நடுவே நிறுத்தி, சிறிது நேரம் வேண்டுமென்றே காலதாமதம் செய்தனர். அந்த இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டம் அலைமோதியது
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, கூட்டத்தை அலைமோத செய்துவிட்டனர். பொது மக்களிடம் தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அசாதாரண சூழல் ஏற்பட்டதால், கூட்ட நெரிசலால் மூச்சு திணறல், கொடுங்காயம், உயிர் சேதம் ஏற்படும் என, மாவட்டச் செயலர் மதியழகன் மற்றும் மாநில பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை செயலர் நிர்மல் குமார் ஆகியோரிடம், நானும், டி.எஸ்.பி.,யும் பலமுறை எச்சரித்தோம்; அறிவுரை வழங்கினோம். நாங்கள் சொன்னதை அவர்கள் கேட்காமல், தொடர்ந்து அசாதாரண சூழல் ஏற்படும்படியான செயலில் ஈடுபட்டனர். போதிய அளவு போலீஸ் பாதுகாப்பு இருந்த போதிலும், மாவட்டச் செயலர் மதியழகன் உள்ளிட்டோர், தங்கள் கட்சித் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தவில்லை. சாலை அருகே, கடைகளுக்கு நிழல் தர அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரிவான தகரக் கொட்டகைகளிலும், மரங்களிலும் ஏறி தொண்டர்கள் அமர்ந்து விட்டனர். இதனால், தகரக் கொட்டகை உடைந்தும், மரங்கள் முறிந்தும், அவற்றில் இருந்த தொண்டர்கள், கீழே நின்ற பொது மக்கள் மீது விழுந்தனர். இதனால், பொது மக்கள் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. விஜயின் பிரசார கூட்டத்திற்கு மாலை 3:00 மணியில் இருந்து, இரவு 10:00 மணி வரை காவல் துறை அனுமதி அளித்திருந்தது. ஆனால், த.வெ.க., கரூர் மாவட்ட ஏற்பாட்டாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என, காவல் துறை சார்பில் கட்டாய நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்த போதிலும், அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி, அரசியல் பலத்தை பறைசாற்ற வேண்டுமென்றே நோக்கத்துடன் திட்டமிட்டு, விஜய் வருவதை நான்கு மணி நேரத்திற்கு மேலாக தாமதப்படுத்தி விட்டனர். சோர்வடைந்தனர்
நீண்ட தாமதத்தின் காரணமாக, அங்கு பல மணி நேரம் காத்திருந்து, போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல், அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால், மக்களின் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக, இச்சம்பவத்தில் அதிகளவில் மிதிபடுதல் ஏற்பட்டு, அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நாமக்கல் போலீசிலும் வழக்கு நாமக்கல்லில் விஜய் பிரசாரம் செய்த நிகழ்ச்சியிலும், வேண்டுமென்றே திட்டமிட்டு காலதாமதம் செய்துள்ளனர். இதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது; சிலர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக, நாமக்கல் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் சதீஷ்குமார், செந்தில்குமார், பிரபு, பாலகிருஷ்ணன், விக்னேஷ், இளையராஜா உட்பட 10 பேர் மீது, அதிகார துஷ்பிரயோகம் செய்து கூட்டத்தை கூட்டுவது உட்பட, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.