உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலுவையில் உள்ள நிவாரண தொகைகளை வரும் 31க்குள் வழங்குது மீன்வளத்துறை

நிலுவையில் உள்ள நிவாரண தொகைகளை வரும் 31க்குள் வழங்குது மீன்வளத்துறை

சென்னை:மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை உட்பட, நிலுவையில் உள்ள நிவாரண தொகைகளை வழங்க, மாவட்ட மீன்வளத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.மீன்வளத் துறை வாயிலாக, மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 8,000; புயல் சேமிப்பு நிவாரண தொகை, 4,500; மீன்பிடி குறைவுகால நிவாரண தொகை, 6,000 ரூபாய், ஒவ்வொரு ஆண்டும் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த நிவாரண தொகைகள், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில், மே மாதம் இறுதிக்குள் அல்லது ஜூன் முதல் வாரத்திற்குள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இதுவரை வழங்கப்படவில்லை. இதுபற்றி கேட்டதற்கு, மீன்வளத் துறையில் நிதி இல்லை என, அதிகாரிகள் கூறுவதாக, துாத்துக்குடி மாவட்ட மீனவர் சங்க உறுப்பினர் ரொமால்ட் உட்பட மீனவர்கள் புகார் கூறினர். இதுகுறித்த செய்தி, நேற்று முன்தினம் நம் நாளிதழில் வெளியானது.இதையடுத்து, துாத்துக்குடி மாவட்ட மீன்வள இயக்குநர், 'நிலுவையில் உள்ள அனைத்து நிவாரண தொகைகளும் இம்மாத இறுதிக்குள், மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, துாத்துக்குடி, மீனவர் சங்க உறுப்பினர் ரொமால்ட் கூறியதாவது:'தினமலர்' நாளிதழ் செய்தியை தொடர்ந்து, எங்களை தன் அலுவலகத்திற்கு, மீன்வளத் துறை இயக்குநர் அழைத்தார். அங்கு சென்ற போது, 'சில காரணங்களால், நிவாரண தொகை வழங்குவதில் தாமதமானது. நாளை துவங்கி இம்மாத இறுதிக்குள் நிலுவையில் உள்ள நிவாரண தொகைகள், அனைத்து மீனவர்களின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும். எனவே, போராட்டம் செய்யும் முடிவை கைவிடுங்கள்' என்று கேட்டுக் கொண்டார். இம்மாதத்திற்குள் நிவாரண தொகை வழங்கப்படவில்லை எனில், மீண்டும் போராட்டத்தை அறிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ