திருவள்ளூர் அறிவுசார் நகரில் முதலீடு வெளிநாட்டு பல்கலைகளுக்கு அழைப்பு பிரிட்டன் நிறுவனத்திடம் பொறுப்பு ஒப்படைப்பு
சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் அறிவுசார் நகரில், வெளிநாட்டு பல்கலைகளை அழைத்து வருவதற்கான பணிக்கு, பிரிட்டனைச் சேர்ந்த, 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' நிறுவனத்தை, 'டிட்கோ' எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் நியமித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே 200 கோடி ரூபாயில், 1,700 ஏக்கரில் அறிவுசார் நகரத்தை, 'டிட்கோ' நிறுவனம் அமைக்கிறது. இங்கு, தேசிய மற்றும் பன்னாட்டு பல்கலை உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளின் ஆராய்ச்சி நிறுவனங்கள், தங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், திறன் மேம்பாட்டு மையங்களை அமைக்கலாம்.இதன் வாயிலாக, தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, சர்வதேச தரத்தில் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், உலக நாடுகளில் அறிவு பரிமாற்றம், புதிய தொழில்நுட்பங்களையும் தெரிந்துகொள்ள முடியும். அறிவுசார் நகரில், வெளிநாட்டு பல்கலைகளின் முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்த நிறுவனமாக, பிரிட்டனை சேர்ந்த, 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' நிறுவனத்தை, 'டிட்கோ' நியமித்துள்ளது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:துபாய், கத்தார் போன்ற நாடுகளில், அறிவுசார் நகரங்கள் உள்ளன. அங்கு, வெளிநாட்டு பல்கலைகளை அழைத்து வருவதற்கான பணிகளை, 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' நிறுவனம் மேற்கொண்டது.எனவே, இந்த தொழிலில் ஏற்கனவே நல்ல அனுபவம் உள்ள டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் நிறுவனமே, தமிழக அறிவுசார் நகரத்திற்கும் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. அந்நிறுவனம், உலகின் முன்னணி பல்கலைகளை தொடர்பு கொண்டு, தமிழகத்தில் முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.